Featured Category

ஃபலஸ்தீன் நிலங்களை இஸ்ரேலுக்கு வாங்கித் தரும் அரபு நாடு-அதிர்ச்சி ரிப்போர்ட்!

ஜெரூசலத்தில் அல்அக்ஸா பள்ளிவாசலுக்கு அண்மையில் அமைந்துள்ள நகரங்களில் பலஸ்தீனர்களுக்கு சொந்தமான காணிகளையும் வீடுகளையும் பெருந்தொகை பணம் கொடுத்து வாங்கி, இஸ்ரேலிய குடியிருப்பாளர்களுக்கு விற்று வருவதாக எமிரேட்ஸ் மீது அண்மையில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகின்றது.
இஸ்ரேலில் செயற்படும் இஸ்லாமிய அமைப்புக்கான ஒன்றியத்தின் பிரதி தலைவர் கமால் காதிப் சமூக வலைத்தளத்தில் அண்மையில் வெளியிட்டுள்ள தகவல்கள் சர்வதேச முஸ்லிம்களின் கவனத்தை ஈர்ப்பதாக அமைந்துள்ளன. அபுதாபியின் முடிக்குரிய இளவரசர் மொஹம்மத் பின் ஸயீத்திற்கு மிக நெருக்கமான எமிரேட்ஸ் தொழிலதிபர் ஜெரூசலத்தில் பலஸ்தீனர்களிடம் இருந்து காணிகள், வீடுகளை கொள்வனவு செய்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

நாட்டை விட்டும் வெளியேற்றப்பட்ட முன்னாள் பதாஹ் அமைப்பின் தலைவர் மொஹம்மத் தஹ்லானுக்கு நெருக்கமான ஜெரூசலத்தைச் சேர்ந்த வணிகர் மூலமாகவே கொடுக்கல் வாங்கல்கள் நிகழ்வதாக மேலும் தெரிவித்துள்ளார்.

அல்அக்ஸா பள்ளிவாசலுக்கு அருகாமையிலுள்ள பலஸ்தீன பிரஜையின் காணியை 5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்தி வாங்குவதற்கு எமிரேட்ஸ் தொழிலதிபர் முன்வந்துள்ளதாக கமால் காதிப் தெரிவித்துள்ளார். எனினும், குறித்த காணியின் உடைமையாளரான பலஸ்தீன பிரஜை அதனை விற்பதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து 20 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கியேனும் குறித்த காணியை கொள்வனவு செய்வதற்கு எமிரேட்ஸ் வியாபாரி கடின பிரயத்தனம் மேற்கொண்டு வருவதாக மேலும் தெரிவித்துள்ளார்.

2014 ஆம் ஆண்டளவில் கிழக்கு ஜெரூசலம் பகுதியைச் சேர்ந்த சில்வான் மற்றும் வாதிஹில்வா பிரதேசங்களில் அபுதாபியின் மொஹம்மத் பின் சயீத் அரசு வீட்டுத் தொகுதிகளைக் கொள்வனவு செய்து இஸ்ரேலியர்களுக்கு விற்பனை செய்து வந்த நிகழ்வையும் இதன்போது கமால் காதிப் சுட்டிக்காட்டியுள்ளார். சர்வதேசத்தின் கண்டனக் குரல்களை சம்பாதித்துக் கொண்ட அந்நிகழ்வு மீளவும் தோற்றம் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கமால் காதிப் தனது கண்டன அறிக்கையில் வலியுறுத்திக் கூறியுள்ள விடயம் யாதெனில், ஜெரூசலத்தைச் சேர்ந்த பலஸ்தீனியர்கள் தமது காணிகளை, வீடுகளை எச்சந்தர்ப்பத்திலும் அந்நியர்களுக்கு விற்றுவிட முனையக் கூடாது. அவர்கள் அதிக தொகைப் பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறினாலும் சரியே. அல்ஜசீராவுடனான நேர்காணலின்போதும் கமால் காதிப் இதனையே முதன்மைப்படுத்திப் பேசியுள்ளார்.

காதிப் கமாலின் நேர்காணல் அல்ஜசீரா ஊடக இணையத்தளத்தில் வெளியாகி இரண்டு நாட்கள் கழித்து முன்னாள் பதாஹ் தலைவர் தஹ்லான் எமிரேட்ஸின் வஞ்சக நோக்கங்களுக்கு துணை போவதாக தன் மீது சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை மறுத்து அல்ஜசீரா ஊடகத்தை காட்டமாக விமர்சித்துள்ளார்.

தஹ்லான் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,

‘பொய்களும் புரட்டுக்களும் இட்டுக்கட்டப்பட்ட புனைக்கதைகளும் அல்ஜசீரா ஊடகத்திற்கு ஒன்றும் புதிதல்ல. இதற்கு கமால் காதிப் மற்றும் அல்ஜசீரா ஊடகத்திற்கு நிதியுதவி அளிப்பவர்களும் விதிவிலக்கல்ல…இவ்வகையான செய்தி மக்களை குழப்புவதற்காகவே பரப்பப்பட்டு வருகிறது. எமது புனித நகரைப் பாதுகாக்க உதவும் கரங்களை வெட்டி விடவே இது துணை நிற்கும்.

ஆக்கிரமிப்பாளர்களின் ஆத்திரத்தை தூண்ட முனைய வேண்டாம்’ என காட்டமாக கருத்துத் தெரிவித்துள்ளார். அதற்கு ஒருபடி மேலாக கமால் காதிப் மற்றும் அல்ஜசீரா ஊடகம் மீது அவதூறு பரப்புவதாக வழக்குத் தாக்கல் செய்யப் போவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார்.

எது எவ்வாறு இருப்பினும், மஸ்ஜிதுல் அக்ஸாவை அண்மித்த கிழக்கு ஜெரூசல வீடுகளையும் காணிகளையும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பெருந்தொகை பணம் கொடுத்து கொள்வனவு செய்து இஸ்ரேலுக்கு கையளித்து வருவதாக இஸ்லாமிய அமைப்புக்களைச் சேர்ந்த அதிகாரிகள் குற்றம் சாட்டுவது இது முதல் தடவையல்ல.

கிழக்கு ஜெரூசலத்தில் இஸ்ரேலிய குடியேற்றங்கள் அதிகரித்து வந்த கடந்த இரு தசாப்த காலங்களில் 2014 இலேயே அதிக உட்பாய்ச்சல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது ஜெரூசலத்தின் புறநகர் பகுதியான பலஸ்தீனர்கள் செறிந்து வாழ்ந்த சில்வான் பிரதேசத்தில் 35 அடுக்கு மாடித் தொகுதிகள் சட்டவிரோத இஸ்ரேலிய குடியிருப்பாளர்களின் கைவசம் சென்றன. அத்தருணத்திலும் இஸ்ரேலில் செயற்பட்டு வந்த இஸ்லாமிய அமைப்புக்கான ஒன்றியத்தின் தலைவர் ரயீத் ஸலாஹ் மற்றும் பிரதி தலைவர் கமால் காதிப் ஆகியோர் இக்குற்றச்சாட்டை முன்வைத்திருந்தனர். பலஸ்தீனர்கள் செறிவாக இருக்கும் பகுதிகளில் அடுக்கு மாடிகளை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கொள்வனவு செய்து இஸ்ரேலியர்களுக்கு வழங்கி வருவதாக அவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.

இது தொடர்பில் கமால் காதிபினை Middle East Monitor ஊடகம் நேரடியாக தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘2014ரமழான் காலப்பகுதியில் காசா மீது இஸ்ரேல் கொடூர தாக்குதல்களை நிகழ்த்திக் கொண்டிருந்த தருணத்தில் அதனை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட எமிரேட்ஸ் வர்த்தகர்கள் இடைத் தரகர்கள் ஊடாக ஜெருசலத்தில் பலஸ்தீனர்களின் குடியிருப்புக்களை கொள்வனவு செய்தனர்.

அக்குடியிருப்புக்களை கொள்வனவு செய்யும்போது அவை அல்அக்ஸாவை பார்வையிட வரும் இந்தோனேஷிய முஸ்லிம்களை தங்க வைப்பதற்காகவே பயன்படுத்தப்படும் என்ற போலி வாக்குறுதிகளை எமிரேட்ஸ் வழங்கியது. ஓரிரு வாரங்கள் இந்தோனேஷிய முஸ்லிம்கள் தங்க வைக்கப்பட்டனர். எனினும், இறுதியில் அவற்றை இஸ்ரேலிய குடியிருப்பாளர்களிடமே எமிரேட்ஸ் கையளித்தது’ என கமால் காதிப் குற்றம் சாட்டியுள்ளார்.

கமால் காதிப்புடன் உரையாடியபோது எமிரேட்ஸின் நயவஞ்சகத்தை வெளிப்படுத்தும் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

2014 இல் எமிரேட்ஸ் தொழிலதிபர்கள் பலஸ்தீன இடைத் தரகர்களை அணுகி, தாம் ஜெரூசல நகரை புனரமைத்து மீள் கட்டுமானப் பணிகளில் ஈடுபடப் போவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர். தாம் நகரை புதுப்பிக்கப் போவதாகவும் அதற்காக பலஸ்தீனர்கள் தமது அடுக்கு மாடிக் குடியிருப்புக்களை தமக்கு வழங்க வேண்டும் எனவும் எமிரேட்ஸ் தொழிலதிபர்கள் கோரியுள்ளனர்.

மேலும் தாம் ஆக்கிரமிப்பு இஸ்ரேலியர்களுக்கு எதிரானவர்கள் எனவும் பலஸ்தீன பூமியை செழுமைப்படுத்தவே தாம் முனைவதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதனை நம்பியே பல அடுக்கு மாடித் தொகுதிகள் பலஸ்தீனர்களால் எமிரேட்ஸ் தொழிலதிபர்களுக்கு கைமாற்றப்பட்டன. எனினும், சில வாரங்களுக்கு பிறகே அவை அனைத்தும் இஸ்ரேலிய சட்டவிரோத குடியிருப்பாளர்களுக்கு எமிரேட்ஸினால் விற்பனை செய்யப்பட்டுள்ள விடயம் பலஸ்தீனர்களுக்கு தெரிய வந்துள்ளது.

அக்காலகட்டத்தில் எமிரேட்ஸின் இந்த நயவஞ்சக நடவடிக்கைகள் அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச சமூகத்தின் பலத்த கண்டனங்களைப் பெற்றுக் கொண்டன. அல்அக்பர் எனும் லெபனானிய பிரபல பத்திரிகை தனது தொடர் ஆய்வுக் கட்டுரைகள் மூலம் ‘எமிரேட்ஸினால் மெல்ல மெல்ல சூறையாடப்படும் ஜெரூசலம்’ என்ற தலைப்பில் எமிரேட்ஸின் குறித்த நயவஞ்சக சதித் திட்டங்களை அப்பட்டமாக உலக்கு தோலுரித்துக் காட்டியது.

பலஸ்தீனிய இடைத் தரகர்களை தம் கைக்குள் லாவகமாக வைத்துக் கொண்டு ஜெரூசலத்தில் குடியிருப்புக்கள் பலவற்றைக் கைப்பற்றிய எமிரேட்ஸின் வேறு பல சதித் திட்டங்களையும் அப்பத்திரிகை ஆதாரபூர்வமாக உலகுக்கு அம்பலப்படுத்தியது.

எனினும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தம் மீதான குற்றச்சாட்டுக்கள் அத்தனையும் போலியானவை என மறுத்தே வந்தது. ஜெரூசலம் நகரைப் பாதுகாப்பதற்காகவும் அங்கே வாழ முடியாது இன்னல்படும் பலஸ்தீனர்களுக்கு உதவும் நோக்குடனேயே தாம் அக்குடியிருப்புக்களை கொள்வனவு செய்திருந்ததாக எமிரேட்ஸ் தன்னிலை விளக்கமளிக்க முற்பட்டது. அக்குடியிருப்புக்களை தாம் கொள்வனவு செய்து தம் வசம் வைத்திருப்பது எதிர்காலங்களில் மீளவும் பலஸ்தீனர்களுக்கு கையளிப்பதற்காகவே எனவும் எமிரேட்ஸ் வாதாடியது.

சவூதி அரேபியா, பஹ்ரைன் மற்றும் எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் இஸ்ரேலுடனான நட்புறவுகளை வெளிப்படையாகவே அதிகரித்து, பலப்படுத்தி வரும் நிலையில் எமிரேட்ஸின் மேற்குறித்த தன்னிலை விளக்தையும் நீலிக் கண்ணீரையும் நம்புவதற்கு முஸ்லிம் சமூகம் தயாராக இல்லை என்பதே நிஜமாகும்.

இஸ்ரேலுடனான மேற்குறித்த அரபு நாடுகளின் உறவுகளானது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நெருக்கம் மிக்கதாக காணப்படுகிறது. பெயரளவு உறவு என்பதையும் தாண்டி தமது பொது விருப்பங்களை கூட்டிணைந்து செயற்படுத்தவும், ஈரான் உள்ளிட்ட தமது பொது எதிரிகளை ஒன்றிணைந்து எதிர்க்கவும் இஸ்ரேலுடன் மேற்குறித்த நாடுகள் கைகோர்த்துள்ளன.

எமிரேட்ஸ் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் இஸ்ரேலுடனான அரபு நாடுகளின் உறவுகளை அதிகரித்து, சுமுக நிலைக்கு கொண்டு வருவதில் நேரடியாகவே பிரயத்தனம் கொள்கின்றன. பலஸ்தீனியர்களின் நியாயமான தாயக மீட்பு உரிமைகளை இதற்கு பகரமாக எமிரேட்ஸ் துச்சப்படுத்தி வருகின்றது. கிழக்கு ஜெரூசலம் பலஸ்தீனத்தின் தலைநகராக திகழும் வகையில் இருநாட்டுத் தீர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் எனும் நிபந்தனையின் அடிபடையிலேயே முன்னதாக அரபு நாடுகள் இஸ்ரேலுடன் உறவைப் பேணி வந்தன.

எனினும் எமிரேட்ஸ், சவூதி போன்ற நாடுகளின் அண்மைய நடவடிக்கைகள் ஏனைய அரபு நாடுகளும் தளர்வுக் கொள்கையைக் கடைப்பிடித்து இஸ்ரேலுடன் அதிக நெருக்கங்களை ஏற்படுத்திக் கொள்ள துணை போகின்றன. இதன் மூலம் பலஸ்தீனர்கள் தமது பேரம் பேசும் ஆற்றலை மெல்ல மெல்ல இழந்து வருகின்றனர் என்பது கசப்பான உண்மையாகும்.

அத்தனைக்கும் முத்தாய்ப்பாக ஜெரூசலம் பலஸ்தீனத்தின் தலைநகரம் என்பதை மறுத்து அதனை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்கும் அமெரிக்காவின் deal of the century எனப்படும் திட்டத்துக்கு சவூதியும் எமிரேட்ஸும் பலத்த ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கி வருகின்றன. மாற்றமாக ஜெரூசலத்தை அன்றி அபுதிஸ் எனும் கிழக்கு ஜெரூசலத்திற்கு அப்பாலுள்ள பகுதியையே பலஸ்தீனர்கள் தமது தலைநகராக ஏற்றுக்கொள்ள வேண்டும் என சவூதியும் எமிரேட்ஸும் வற்புறுத்தி வருகின்றன.

ஜெரூசலத்தின் இருப்பையே கேள்விக்குறியாக்கும் எமிரேட்ஸின் இந்த சதித் திட்டங்கள் பலஸ்தீன விவாகரத்தில் அதன் நிலைப்பாட்டை உலகுக்கு வெளிப்படையாகவே சித்திரிக்கின்றன. பலஸ்தீனர்களை சொந்த நிலங்களை விட்டும் விரட்டியடித்து உருவாக்கப்பட்ட இஸ்ரேலிய தனி நாட்டின் தேசிய தினம் தொடர்பிலான கொண்டாட்டங்களுக்கு எமிரேட்ஸ் தமது பிரதிநிதிகள் குழாமை அனுப்பி சிறப்பித்துள்ளது. அதே நாள்தான் பலஸ்தீனர்கள் தமது நக்பா தினத்தை (மாபெரும் வெளியேற்றம்) அனுஷ்டித்து வருகின்றனர் என்பதை எமிரேட்ஸ் சாதகமாக மறந்து விட்டது போலும். இவ்வாறான நயவஞ்சகத்தனங்கள் மூலம் தாம் இஸ்ரேலுக்கு ஆதரவானவர்கள் என்பதை எமிரேட்ஸ் நிரூபித்தே வருகின்றது.

இவற்றையெல்லாம் அலசி ஆராய்ந்து பார்க்கும் பட்சத்தில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு திட்டத்துக்கு எமிரேட்ஸ் உதவி வருகிறது எனும் குற்றச்சாட்டு தொடர்பிலும், பலஸ்தீன குடியிருப்புக்களை வாங்கி இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களுக்கு எமிரேட்ஸ் கையளித்து வருகின்றது எனும் குற்றச்சாட்டு தொடர்பிலும் எவ்வித போலித் தன்மைகள் இருப்பதாகத் தெரியவில்லை.

எமிரேட்ஸ் மற்றும் சவூதி இஸ்ரேலுடனான தமது உறவுகளை மட்டுப்படுத்தப்பட்டதாகவன்றி, திரைமறைவுக்கு பின்னாலன்றி நேரடியானதாகவும் உச்சமானதாகவும் அமைத்துக் கொள்வதில் அண்மைக் காலமாக முனைப்புக் கொண்டுள்ளன என முஹம்மத் சஹாதா எனும் பிரபல அரசியல் ஆய்வாளர் எழுதிச் செல்கிறார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், ‘ஜெருசலத்தைச் சேர்ந்த பலஸ்தீனியர்களிடமிருந்து குடியிருப்புத் தொகுதிகளை எமிரேட்ஸ் வாங்குவதன் மூலம் ஜெரூசலம் ஒருபோதும் பலஸ்தீனத்தின் தலைநகராக திகழ மாட்டாது என்பதை பலஸ்தீனியர்களே ஒத்துக்கொண்டதை உலகுக்கு காட்டுவதாக அமைந்து விடும். இதனையே எமிரேட்ஸ் விரும்புகிறது. சியோனிஸவாதிகளுடன் எமிரேட்ஸ் உறவுகளைப் பலப்படுத்திக் கொண்டிருப்பது பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. பலஸ்தீனர்கள் இது குறித்து விழிப்புடன் செயற்படுவது அவசியமானது’ என எச்சரித்துள்ளார்.

 

– நன்றி : நவமணி

ஹஸன் இக்பால்

error: Content is protected !!