Featured Category

உயிர் கொடுத்த உத்தமி – ரஸான் அல்நஜ்ஜார்!

 காசா எல்லையில் இடம்பெற்று வரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் காயமடையும் பலஸ்தீனர்களுக்கு அவசர மருத்துவ உதவிகளை வழங்கி வந்த பெண் மருத்துவ பணியாளரான ரஸான் அல்நஜ்ஜார் எனும் 21 வயது தன்னார்வலரை இஸ்ரேலிய படையினர் சுட்டுக் கொன்றமை சர்வதேச அரங்கில் வன்மையான கண்டனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
தற்காப்பு நோக்கம் கருதி தாக்குதல்கள் நடாத்துவதற்கு இஸ்ரேலுக்கு பூரண உரிமை உண்டு என மேற்குலக தலைமைகள் கூட்டாக அறிக்கை விடுத்து சில மணிநேரங்களிலேயே இப்படுகொலை நிகழ்ந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை காசா எல்லையில் ஆர்ப்பாட்டக் களத்தில் இஸ்ரேலிய படையினரின் தாக்குதல்களில் காயமடைந்த பலஸ்தீனிய போராட்டக்காரர்களுக்கு முதலுதவி வழங்கிக் கொண்டிருந்த ரஸான் அல்நஜ்ஜாரை இஸ்ரேலிய ஸ்னைப்பர் படை சுட்டுக் கொன்றுள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்திலே வலுவான இராணுவ பலத்தைக் கொண்டிருப்பதாக பெருமிதம் கொள்ளும் இஸ்ரேலிய படையினருக்கு காயமுற்றோருக்கு முதலுதவிகளை வழங்கி வந்த இந்த இளம் பெண் எவ்வகையில் அச்சுறுத்தலாக இருந்திருக்க முடியும்? தற்காப்பு தாக்குதல்கள் எனும் நாமத்தில் அப்பாவி மக்களை படுகொலை செய்து பலஸ்தீனர்களின் போராட்ட மனோநிலையில் தாக்கங்களை ஏற்படுத்துவதே இஸ்ரேலின் நோக்காக அமைந்துள்ளது.

இது கடந்த பல தசாப்தங்களாகவே நிகழ்ந்து வருகிறது. கடந்த மாதம் 14 ஆம் திகதி காசா எல்லையில் அமைதியான முறையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட பலஸ்தீனர்கள் மீது இஸ்ரேலிய படையினரால் கட்டவிழ்த்து விடப்பட்ட தாக்குதல்களில் 50 இற்கும் மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் பலியானது தொடக்கம் மேற்குலகு இஸ்ரேலின் தாக்குதல்களை நியாயப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறது.

‘தாயக நிலத்துக்கான மீள் வருகைப் பேரணி’ என்ற அண்மையில் ஆரம்பித்துள்ள பலஸ்தீன போராட்டங்களில் குறியீட்டுச் சின்னமாக அமைந்து போனார் 21 வயதே நிரம்பிய இளம் மருத்துவ உதவியாளர் ரஸான் அல்நஜ்ஜார். மீள் வருகைப் பேரணி மீதான இஸ்ரேலிய படையினரின் அடாவடித்தனங்கள் தொடர்பில் சர்வதேச ஊடகங்களுக்கு தகவல்களை வழங்கி வந்ததும், இஸ்ரேலிய அடக்குமுறையில் காயமுற்ற பலஸ்தீன போராட்டக்காரர்கள் பற்றிய விபரங்களையும் இஸ்ரேலின் அட்டூழியங்களை உலகுக்கு வெளிக்காட்டியதே இவ்விளம்பெண் செய்த குற்றங்களா?

காயமடைந்த பலஸ்தீனியர்களின் காயங்களுக்கு கட்டுப்போட்டு வலி நிவாரணியை வழங்கி முதலுதவி செய்து கொண்டிருந்த ரஸான் அல்நஜ்ஜார் இஸ்ரேலிய ஸ்னைப்பர் படைகளின் குறிபார்த்துச் சுடும் துப்பாக்கிச் சன்னங்களுக்கு இலக்காகிப் போனாள். காயமுற்றோர்களின் இரத்தக் கறைகளையே அது வரை சுமந்திருந்த அவள் அணிந்திருந்த தாதியர்களுக்கான வெண்ணிற முதன் முதலாக அவளது இரத்தக் கறைகளில் தோய்ந்து போனது.

1948 இல் இஸ்ரேலிய படையினரால் தமது சொந்த நிலங்களை விட்டும் துரத்தியடிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக கடந்த மார்ச் மாதம் 30 ஆம் திகதி தொடக்கம் காசா எல்லையில் பலஸ்தீன பொதுமக்களினால் எதிர்ப்புப் பேரணிகள் இடம்பெற்று வருகின்றன. இப்பேரணியில் கலந்து கொள்ளும் அப்பாவி பலஸ்தீன பொதுமக்கள் மீது  இஸ்ரேலிய ஸ்னைப்பர் படை கண்மூடித்தனமாக தாக்குதல் நடாத்தி வருகிறது.

 

போராட்டக் களத்தில் மருத்துவ உதவியாளர்கள் இருக்க வேண்டிய தேவையை உணர்ந்த ரஸான் அல்நஜ்ஜார் இப்போராட்டத்தின் ஆரம்பம் முதலே தன்னார்வலராக செயலாற்றி வந்தார். இப்பேரணி ஆரம்பித்து இதுவரை ரஸான் அல்நஜ்ஜார் உள்ளடங்கலாக 119 பலஸ்தீனியர்களை இஸ்ரேல் சுட்டுக் கொன்றுள்ளது. 13,000 இற்கும் அதிகமானோர் படுகாயமுற்றுள்ளனர்.

ரஸான் அல்நஜ்ஜார் தனது குடும்பத்துடன் பேசிய இறுதி வார்த்தைகள் பற்றி அவரது சக பணியாளர் கூறுகையில், ‘நோன்பு துறக்கும் வேளை உண்பதற்காக மரக்கறி உணவுகளை சமைத்து வைக்குமாறு கூறிவிட்டு மருத்துவ குழாமுடன் ரஸான் அல்நஜ்ஜார் இணைந்து கொண்டார். பின்னர் நாம் ஒரு குழுவாக போராட்டக் களம் நோக்கி விரைந்தோம்’ என தெரிவிக்கின்றார்.

ஆறு பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் ரஸான் அல்நஜ்ஜார் மூத்த மகளாவார். தாதியர் கற்கைநெறியில் பட்டம் பெற்றுள்ள ரஸான் அல்நஜ்ஜார் பல்வேறு மருத்துவமனைகள் மற்றும் தன்னார்வ மருத்துவ முகாம்களில் பணியாற்றி அனுபவமிக்க மருத்துவ பணியாளராக திகழ்ந்துள்ளார். மீள் வருகை போராட்டக் களத்தில் காயமுற்றோர்களுக்கு முதலுதவிகளை வழங்குதல், சர்வதேச ஊடகங்களுக்கு கள நிலைவரங்களை அறிவித்தல் என மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி வந்த வகையில் பலஸ்தீனர்களின் பெறுமதி மிக்க சொத்தாக திகழ்ந்துள்ளார்.

கடந்த மாதம் The New York Times இற்கு அவர் வழங்கியிருந்த செவ்வியில் பெண்ணாக இருந்தும் போராட்டக் களத்தில் காயமுற்றோர்களுக்கு மருத்துவ உதவிகளை முன்னின்று வழங்குதல் தொடர்பில் தனக்குள்ள ஆர்வம் பற்றி இவ்வாறு கூறியிருந்தார்:

‘போராட்டக் களங்களில் படுகாயமுற்ற ஒருவரின் உயிரைக் காப்பாற்றுதல், அவருக்கான முதலுதவிகளை தக்க சமயத்தில் வழங்குதல் ஆண்களின் பொறுப்பு என்று ஒதுக்கிவிடக் கூடாது. பெண்களும் போராட்டக் களங்களில் உயிர் காக்கும் பணிகளில் ஈடுபட வேண்டும். என் சமுதாயத்திற்கு என்னால் ஆற்றக் கூடிய இப்பணிகளை நான் திறம்பட செய்வேன். இப்பணியை மனதார நான் நேசிக்கிறேன். எமது நாட்டுக்கு நாம் செய்யும் சேவை’ என சக பெண் மருத்துவ பணியாளர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

சுட்டுக் கொல்லப்படுவதற்கு சில தினங்களுக்கு முன்னதாக Al Jazeera ஊடக நேர்காணலொன்றின்போது போராட்டக் களங்களில் பணியாற்றிய அனுபவங்கள் பற்றி வினவப்பட்டதும்,

‘படுகாயமுற்றவர்களுக்கு என்னால் முடிந்தளவு விரைவாக முதலுதவிகளை வழங்கி வலிகளை குறைக்க முயற்சிப்பேன். அவர்கள் நன்றிப் பெருக்குடன் புன்னகைக்கும் தருணம் மனதிற்கு பெரும் ஆத்மானந்தமாக இருக்கும். எனினும், முதலுவிகள் பயனளிக்காது என் கைகளிலேயே பல பலஸ்தீன இளைஞர்கள் தங்களின் இறுதி மூச்சை விட்டுள்ள தருணங்களில் தாங்க முடியாத வலி என் மனதில் ஏற்படும்.

மரணிக்க முன்னர் தமது குடும்பத்தினருக்கு கூறுமாறு சிலவற்றை கூறிவிட்டு என் கைகளில் தமது இறுதி மூச்சை சுவாசிப்பர். அத்தருணங்கள் வலி மிகுந்தவை. சிலபோது காயமுற்ற இளைஞர்கள் உயிர் பிரிவதற்கு முன் தமது தங்க ஆபரணங்கள், கைத்தொலைபேசிகள் என்பவற்றை என்னிடம் ஒப்படைத்து விட்டு தமது குடும்பத்திடம் சேர்க்குமாறு கூறியுமுள்ளனர். இவ்வாறான பல மனதைக் கனக்க வைக்கும் அனுபவங்கள் நெஞ்சில் வடுக்களாக தங்கி நிற்கும். எந்நாட்டு மக்கள் போராடிக் கொண்டிருக்கும்போது அவர்களைக் காப்பாற்ற களத்தில் நான் இருக்காது வெறுமனே மருத்துமனையில் பணியாற்றுவதை நான் வெட்கமாகக் கருதுகிறேன். களத்தில் நின்று உயிர் காப்பதே என் உயரிய இலக்கு’ என தெரிவித்திருந்தார்.

மீள் வருகை போராட்டக் களங்களுக்கு பெண் மருத்துவ பணியாளர்கள் பலவந்தமாக அழைத்துக் கொண்டுவரப்படுவதாக முன்னதாக சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டு தொடர்பில் கடந்த மே மாதம் 16 இல் தனது முகநூல் பக்கத்தில் மறுப்புத் தெரிவித்திருந்தார். சுய விருப்பின் பேரிலேயே பெண் மருத்துவ உதவியாளர்கள் போராட்டக் களங்களில் சேவையாற்றுவதாக உறுதிப்படுத்தியிருந்தார்.

ஜூன் 1 ஆம் திகதி போராட்டக் களத்தில் இஸ்ரேலிய இராணுவத்திற்கு எவ்வித அச்சுறுத்தல்களுமின்றி ரஸான் அல்நஜ்ஜார் சேவையாற்றிக் கொண்டிருந்தபோது ஸ்னைப்பர் படையினால் நெஞ்சில்  சுடப்பட்டுள்ளார் எனவும் இது தொடர்பில் நேரடி சாட்சியங்கள் இருப்பதாகவும் மனித உரிமைகள் ஆர்வலர்  Al Mezan தெரிவித்துள்ளார்.

மேலும் கூறுகையில் ‘காசா எல்லை வேலிக்கு 100 மீற்றர் தூரத்தில் மருத்துவ பணியாளர் என தெளிவாகத் தெரியக் கூடிய வெண்ணிற ஆடையுடனேயே சேவை புரிந்து கொண்டிருந்தார். குறிபார்த்துச் சுடும் இஸ்ரேலிய படை இவரை படுகொலை செய்துள்ளதன் மூலம் மருத்துவ உதவிகளை வழங்கும் தன்னார்வலர் குழுக்களுக்கு பீதியையும் அச்சத்தையும் தோற்றுவிக்க முனைந்துள்ளன. எனினும், இஸ்ரேலிய படைகளின் துப்பாக்கிச் சன்னங்களுக்கு அஞ்சி எமது தன்னார்வலர்கள் பின்வாங்கப் போவதில்லை’ என தெரிவித்துள்ளார்.

பல்லாயிரக்கணக்கான பலஸ்தீனர்களின் பங்குபற்றுதலோடு கடந்த சனிக்கிழமை ரஸான் அல்நஜ்ஜாரின் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. இதன்போது ரஸான் அல்நஜ்ஜாரின் தாயார் ஸப்ரீன் அல்நஜ்ஜார் Al Jazeera ஊடகத்திற்கு தனது மகளின் இறுதி நினைவுகள் பற்றி குறிப்பிடுகையில்,

‘வழமையாக காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை என் மகள் களத்தில் மருத்துவ பணியாற்றி வந்தாள். அன்றைய தினம் நேரகாலத்துடன் எழுந்து தொழுதுவிட்டு தயாரானாள். போராட்ட களத்திற்கு சென்று வருகிறேன் என சிரித்த முகத்துடன் கூறி விடைபெற்றுச் சென்றார்.

என் மகளின் புன்னகை ததும்பிய அவளது இறுதி முகத்தின் பிம்பம் இன்னும் என் மனதில் நிழலாடுகின்றது. அவள் நாம் வசிக்கும் தெருவைக் கடந்து செல்லும் வரை நான் மேல்மாடியில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தேன். அழகிய சின்னப் பறவையைப் போல நகர்ந்து சென்றாள். அதுவே என் மகளின் இறுதி நடை என்பதை நான் அறிந்திருக்கவில்லை. புதுமணப் பெண்ணாக வெண்ணிற ஆடையில் காண வேண்டிய அவளை கபன் துணியில் காண்கிறேன்.

மருத்துவ உதவியாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடாத்துவது சர்வதேச சட்டங்களுக்கு முரணானது. இது தொடர்பில் ஐ.நா. சபை தலையிட்டு விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்’ என்றார்.

ரஸான் அல்நஜ்ஜார் கொல்லப்பட்ட சமயம் உடனிருந்த சக மருத்துவ உதவியாளரான ரிதா கூறுகையில், ‘இஸ்ரேலிய இராணுவத்தினர் காசா எல்லை வெளியில் அணிவகுத்திருந்தனர். அப்போது காயமுற்று நிலத்தில் வீழ்ந்து கிடந்த பலஸ்தீன இளைஞர் ஒருவரை மீட்பதற்காக ரஸான் அல்நஜ்ஜார் கைகளை வான் நோக்கி உயர்த்தியவாறு (ஆயுதங்கள் எதுவுமில்லை என்பதைக் குறிப்பாய் தெரிவித்தல்) அவ்விடம் சென்றார்.

மருத்துவ உதவியாளர்கள் அணியும் வெண்ணிற சீருடையைக் கண்ட பின்னரும் கூட இஸ்ரேலிய படையினர் மருத்துவ குழாம் நோக்கி கண்ணீர்ப்புகைக் குண்டை வீசினர். மறுகணம் ரஸான் அல்நஜ்ஜாரின் நெஞ்சை குறி வைத்துச் சுட்டனர். துப்பாக்கிச் சன்னம் நெஞ்சை கிழித்து வெளியேறியது. துப்பாக்கி உடலைக் கிழித்து வெளியேறியதும் நெஞ்சைப் பிடித்தவாறு கதறித் துடித்து நிலத்தில் வீழ்ந்தார்.

அங்கே மருத்துவ பணியாளர்கள் தவிர்த்து வேறு போராட்டக்காரர்கள் எவரும் இருக்கவில்லை. எனவே, இஸ்ரேலிய படைகள் தற்காப்புக்கு சுட்டனர் என கூறி நியாயம் கற்பிக்க முயல்வது முற்றிலும் தவறு. அவர்கள் எங்களை வேண்டுமென்றே குறி வைத்துச் சுட்டனர்’ என தெரிவித்தார்.

பலஸ்தீன சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘கடந்த வெள்ளிக்கிழமை இஸ்ரேலிய படையினர் நிராயுதபாணியாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட ஒரு பகுதி மக்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடாத்தியது. இதனால் காயமுற்றவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி அவர்களுக்கான முதலுதவிகளை வழங்க மருத்துவ பணியாளர் குழு தயாரானது.

தமது இரு கைகளையும் வானத்தை நோக்கி உயர்த்தியவாறு தம்மிடம் ஆயுதங்கள் எதுவுமில்லை என்பதை வெளிப்படுத்தி உள்நுழைந்த மருத்துவ குழாம் மீது இஸ்ரேலிய படைகள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர். இதில் நஜ்ஜார் கொல்லப்பட்டதுடன் பல பணியாளர்கள் காயமடைந்தனர். இது ஜெனீவா ஒப்பந்தத்தை மீறிய வகையில் போர்க் குற்றமாகும். களங்களில் மருத்துவ உதவிகளை வழங்கும் பணியாளர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்வது சர்வதேச சட்டங்களில் தடுக்கப்பட்ட ஒன்றாகும்.

மீள் வருகைப் போராட்டம் தொடங்கி இதுவரை இஸ்ரேலிய படையினரின் தாக்குதலில் 238 மருத்துவ பணியாளர்கள் காயமுற்றுள்ளனர். மேலும் 38 அம்பியூலன்ஸ் வாகனங்கள் நிர்மூலமாக்கப்படுள்ளன.

இஸ்ரேலிய பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் ரஸான் நஜ்ஜார் கொலை பற்றி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. மேலும் போராட்ட களங்களில் சிறுவர்களை கேடயமாக பயன்படுத்துவது தொடர்பில் ஹமாஸ் அமைப்பை குற்றம் சாட்டியுள்ளது.

ரஸான் அல்நஜ்ஜாரின் உடல் கபனிடப்பட்டு நல்லடக்கம் செய்வதற்கு தயாராக இருக்கும் வேளை உதிரம் தோய்ந்த அவரது மருத்துவ மேலங்கியை தூக்கிப் பிடித்தவாறு ஊடகங்களுக்கு , ‘இதுதான் எனது மகள் சுமந்து சென்ற ஆயுதம்…. காயங்களுக்கு கட்டுப் போடும் இந்த துணிகளே அவளது ஆயுதம்’ என கண்களில் கண்ணீர் மல்க கதறியழுத காட்சி சமூக ஊடகங்களில் பரவலடைந்துள்ளது.

ஹஸன் இக்பால், யாழ்ப்பாணம்

(மூலம்: அல்ஜஸீரா)

ஹஸன் இக்பால்

error: Content is protected !!