Featured Category

கனடா மீதான சவூதியின் சீற்றம்!

ஜூன் 2017 முதல் சவூதி அரேபியாவில் முடிக்குரிய இளவரசர் மொஹம்மத் பின் சல்மான் பல அதிரடி அரசியல், சமூக மற்றும் பொருளாதார மாற்றங்களை மேற்கொண்டு வருகின்றமை அனைவரும் அறிந்ததே. நாட்டின் மிகப் பெரும் சக்தி மூலமான அரம்கோ நிறுவனத்தை தனியார்மயப்படுத்தியமை, பல வருட தடைகளை விலக்கி பெண்களுக்கும் வாகனம் ஓட்டும் உரிமையை வழங்கியமை மற்றும் பல்வேறு நகர்களில் திரையரங்குகளை நிர்மாணித்தமை உள்ளிட்ட பல சடுதி மாற்றங்கள் உலகளவில் சார்பான, எதிரான பல விமர்சனங்களை எதிர்கொண்டன.
கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் சவூதியின் முன்னணி தொழிலதிபர்கள் மற்றும் இளவரசர்களை கைது செய்து தடுத்து வைத்தமை அத்தனைக்கும் முத்தாய்ப்பாக பேசப்பட்டது. அவர்களின் விடுதலைக்கு பகரமாக பாரிய பணத்தொகை பெற்றுக் கொள்ளப்பட்டதாக பின்னர் தெரிய வந்தது.
போர்ப்ஸ் சஞ்சிகை வெளியிட்ட செய்தியின் பிரகாரம், கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட இளவரசர்களில் தொழிலதிபரும் தனவந்தருமான இளவரசர் அல்வலீத் பின் தலாலின் ஒட்டுமொத்த சொத்தும் முடக்கப்பட்டு சொற்ப தொகை மாதாந்த மானியமாக வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான சடுதி கைது மற்றும் தடுத்து வைப்புக்கள் வரிசையில் பிரபல மனித உரிமைகள் ஆர்வலர்களான சமார் பதாவி மற்றும் நசீமா சதாஹ் ஆகிய இரு பெண்களை சவூதி அண்மையில் கைது செய்து தடுத்து வைத்தது. மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் மீதான சவூதியின் அடக்குமுறைகள் தொடர்பில் உலகளாவிய ரீதியில் கண்டனங்கள் எழுந்த நிலையில் கனடா வெளியுறவு அமைச்சு சவூதியின் செயற்பாட்டை கண்டித்து அறிக்கை வெளியிட்டது.
‘சவூதியை சேர்ந்த மனித உரிமைகள் செயற்பாட்டாளர் பதாவி மற்றும் ஏனைய மனித உரிமைகள் ஆர்வலர்களை கைது செய்து தடுத்து வைத்திருக்கும் சவூதியின் முன்னெடுப்பு மிகவும் கண்டனத்துக்குரியது. இது தொடர்பில் கனடா மிக உன்னிப்பாக கவனித்து வருகின்றது. அத்துடன் கைது செய்யப்பட்டுள்ள மனித உரிமை ஆர்வலர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’ என கனேடிய வெளியுறவு அமைச்சு சவூதியை வலியுறுத்தியது.

கனேடிய வெளியுறவுத்துறை அமைச்சு கண்டன அறிக்கை வெளியிட்டதுதான் தாமதம் ரியாத்திலிருந்து கனேடிய தூதுவரை வெளியேற்றியது சவூதி அரசு. அத்துடன் ஒட்டாவாவிலிருந்து தனது தூதுவரை நாட்டுக்கு மீள அழைத்துக் கொண்டது. அத்துடன் நில்லாமல் டொரோண்டோவிற்கான சவூதி விமானங்களை அத்தனையும் தடை செய்யப்பட்டன. மேலும் கனடாவில் நடைபெறும் பல்வேறு சவூதியின் நிகழ்ச்சித் திட்டங்கள் அனைத்தையும் நிறுத்திக் கொண்டது.

கனேடிய நிதிச் சந்தையில் முதலீடு செய்யப்பட்டுள்ள பிணை முறிகள், நிலையான பங்குகள் என்பவற்றை உடன் அமுலுக்கு வரும் வகையில் மீளப் பெற்றுக் கொள்ளுமாறு சவூதியின் மத்திய வங்கி தனது வங்கிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளமை நிலைமையின் தீவிரத்தை எடுத்துக் காட்டுகிறது.

இரு நாடுகளுக்கும் இடையிலான முறுகல் நிலை காரணமாக கனேடிய கல்வி நிறுவனங்களில் கல்வி கற்கும் சவூதி மாணவர்கள் கனடாவை விட்டும் வெளியேறி வருகின்றனர். கனேடிய மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சென்றிருக்கும் சவூதி பிரஜைகள் உடனடியாக வேறு நாடுகளுக்கு இடமாற்றப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 

கனேடிய வெளிவிவகார அமைச்சின் கண்டன அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் ‘சவூதியின் உள்ளக விவகாரங்களில் கனேடிய அரசு தலையிடுவதானது சர்வதேச சட்டதிட்டங்களுக்கும் நெறிமுறைகளுக்கும் முரணானது. இது தொடர்பிலான கனேடிய அரசின் முன்னெடுப்புக்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.இல்லையெனில், கனேடிய உள்ளக விவகாரங்களில் சவூதி தலையிட வேண்டிய நிலைமை ஏற்படும்’ என சவூதி காட்டமாக தெரிவித்துள்ளது.

இவை அனைத்தும் கடந்த வருடம் மே மாதத்தில் கட்டாருடனான சவூதியின் முறுகல் போக்கை மீளவும் நினைவுக்கு கொண்டு வருபவையாக அமைந்துள்ளன எனவும், தன்முனைப்பு மிக்க, தன் நிலவுகையை எப்போதும் உலகுக்கு காட்டிக் கொண்டே இருக்க விரும்பும் ஒருவனின் செயற்பாட்டை ஒத்ததாகவே முடிக்குரிய இளவரசர் பின் சல்மானின் முன்னெடுப்புக்கள் அமைந்துள்ளதாக அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

சமார் பதாவி சவூதி பிரஜையாக இருப்பினும் கனடா அவரது கைது தொடர்பில் கரிசனை கொண்டிருப்பதற்கு மனிதாபிமான காரணங்கள் தவிர்த்து வேறு பல காரணங்களும் உள்ளன.
அண்மையில் சவூதி அரசினால் கைது செய்யப்பட்ட சமார் பதாவியின் சகோதரர் ராயிப் ஏலவே 2012 இல் இஸ்லாத்தை இழிவுபடுத்திய குற்றச்சாட்டில் சவூதியினால் கைது செய்யப்பட்டு 10 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை ராயிபின் மனைவி தனது மூன்று பிள்ளைகளுடன் கனடாவில் தஞ்சம் புகுந்தார். கடந்த ஜுலை 1 ஆம் திகதி அக்குடும்பத்தினருக்கு கனேடிய பிரஜாவுரிமை வழங்கப்பட்டது.

கனடாவில் புகலிடம் பெற்றுள்ள ராயிபின் மனைவி தனது கணவர் ஜித்தா சிறையில் வாடுவதற்கு எதிராக பலவேறு போராட்டங்களை கனேடிய மனித உரிமைகள் அமைப்புக்களுடன் இணைந்து முன்னெடுத்து வந்தமையும் சவூதியின் கோபத்தைக் அதிகரித்திருக்க வேண்டும். ராயிபின் சகோதரி சமார் பதாவியில் கைதுக்கு அதுவும் ஒரு காரணமாக அமைந்திருக்க கூடும்.
9/11 இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்கு பின்னர் சவூதியைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அமெரிக்கா செல்வதும், சவூதியை சேர்ந்த இளம் மாணவர்கள் அமெரிக்காவில் தங்கியிருந்து கற்பதும் இயலாத காரியமாக போயிருப்பதனால், கனடா மீதே சவூதி அபார நம்பிக்கை வைத்திருந்தது.

பொதுவாக முஸ்லிம் மாணவர்களுக்கு, குறிப்பாக சவூதி மாணவர்களுக்கு வீசா இலகுவில் பெற்றுக் கொள்ளக் கூடிய ஆங்கிலம் பேசக் கூடிய நாடுகளில் முதன்மையானதாக கனடா திகழ்ந்து வந்தது. ரமழான் பண்டிகை வாழ்த்துச் செய்தியில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குறிப்பிடுகையில்,’ரமழான் பண்டிகையானது கனடா வாழ் முஸ்லிம்களையும் ஏனைய மக்களையும் இணைக்கும் பாலமாக அமைந்துள்ளது’ என தெரிவித்திருந்தார்.
இவ்வகையில் முஸ்லிம்கள் மீது பெரு மதிப்பும் கொண்டுள்ள கனடா அரசாங்கத்தை சவூதி அவமதித்துள்ளது என்றுதான் கூற வேண்டும். கனேடிய வெளியுறவு அமைச்சு வெளியிட்டிருந்த பொதுவான கண்டன அறிக்கையொன்றுக்கு சவூதி இராஜாங்க உறவுகளைத் துண்டிக்குமளவுக்கு சென்றிருப்பதானது முடிக்குரிய இளவரசர் பின் சல்மானின் பக்குவமற்ற தன்மையை எடுத்துக் காட்டுகின்றது.

மேலும் அமெரிக்காவின் அடிவருடியாக சவூதி செயற்பட்டு, ட்ரம்ப்பை மகிழ்விக்க முனைகின்றது என அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கனடாவுக்கு எதிரான நிலைப்பாடு அமெரிக்காவை மகிழ்விக்கும் என்பதை பின் சல்மான் நன்கறிந்து கொண்டிருக்கின்றார். மேலும் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் நீதமான நிர்வாகம், திறமையான ஆட்சி முறைமை தொடர்பில் முடிக்குரிய இளவரசர் காழ்ப்புணர்வு கொண்டுள்ளமையினாலே இவ்வகையில் அவர் செயற்படுகிறார் எனவும் விமர்சனம் எழுகின்றது.

ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றது முதல் இளவரசர் பின் சல்மானுடன் நெருங்கிய உறவுகளைப் பேணி வருகிறார். மேலும் ட்ரம்ப்பின் மருமகனும் மத்திய கிழக்கு விவகாரங்களுக்கான ஆலோசகருமான ஜாரீத் குஷ்னர் சவூதி இளவரசர் பின் சல்மானின் பெரும் நம்பிக்கைக்குரியவராக திகழ்ந்து வருகிறார்.

இளவரசர் பின் சல்மான் எடுத்து வரும் அண்மைய அதிரடி நடவடிக்கைகள் பலவற்றில் குஷ்னரின் ஆலோசனைகளும் பெரும் பங்கு வகிக்கின்றது என கருதப்படுகிறது. அண்மைய காலங்களில் கனேடிய பிரதமர் தொடர்பில் ட்ரம்ப் காட்டமாகவே விமர்சித்து வருகின்றார்.
கடந்த மாதம் இடம்பெற்ற G7 மாநாட்டின் பின்னர் இந்நிலை அதிகரித்துள்ளது. மாநாட்டின் பின்னர் ட்ரம்ப் ட்விட்டர் பதிவொன்றில், கனடா எமது பண்ணை தொழிலாளர்கள் மீது பாரிய வரிச் சுமையை விதிக்கின்றது. எனினும், கனேடிய பிரதமர் மாநாட்டின்போது போலியான தகவல்களை சமர்ப்பிக்கின்றார். அமெரிக்க தொழிற்சந்தையை சிதைக்கும் கனேடிய வியாபார ஒப்பந்தங்களில் இனிமேல் கைச்சாத்திடப் போவதில்லை’ என கனடா மீது காட்டம் தெரிவித்திருந்தார்.
அதேவேளை குடிவரவு குடியகல்வு கொள்கைகளில் இறுக்கமான நிலைப்பாடுகளை அண்மையில் அமெரிக்கா எடுத்திருந்தபோது அது தொடர்பில் கனேடிய பிரதமர் விமர்சித்திருந்தார். ‘சட்ட ரீதியற்ற முறையில் நாட்டினுள் உட்புகும் குடியேறிகளின் குழந்தைகளை அவர்களிடம் இருந்து பிரிப்பதாக அமெரிக்கா எடுத்திருக்கும் தீர்மானமானது முற்றிலும் மனிதாபிமானமற்றது’ என அண்மையில் கனேடிய பிரதமர் பகிரங்கமாக தெரிவித்திருந்தமை ட்ரம்ப்பின் ஆத்திரத்தைக் கிளறுவதாகவே அமைந்து போனது.

ஆக, கனடா மீதான சவூதியின் அண்மைய பாயச்சலானது அமெரிக்காவின் நேரடித் தூண்டுதலின் பேரில் இடம்பெற்றதாகவே இருக்கக் கூடும் என கருதப்படுகிறது.
கனடா உடனான சவூதியின் அண்மைய முறுகலானது சவூதி இளவரசர் பின் சல்மானின் பிடிவாத குணம் மற்றும் காழ்ப்புணர்வு என்பவற்றை பின்புலமாகக் கொண்டுள்ளது என்கின்றனர் அரசியல் அவதானிகள்.

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மக்களால் தெரிவு செய்யப்பட்ட இளம் ஆட்சியாளர். தனது நாட்டை மிகவும் திறமையான முறையில் ஆட்சி செய்து வருகிறார். மாற்றமாக, சவூதியின் இளவரசர் பின் சல்மானோ மன்னரின் வாரிசு அடிப்படையில் ஆட்சிக்கு வந்தவர்.
கனேடிய பிரதமரின் கண்டன அறிக்கையில் வெட்கித்து அதனால் எழுந்த சீற்றத்தினாலும் அமெரிக்காவின் தூண்டுதலினாலுமே கனடா உடனான இராஜாங்க உறவை துண்டித்துக் கொள்ள முனைகிறார். கனேடிய அரசு தனது கண்டன அறிக்கையை வாபஸ் வாங்கிக் கொள்வதோடு மண்டியிட்டு மன்னிப்பும் கோர வேண்டும் என சவூதி எதிர்பார்ப்பது முட்டாள்தனமானது.

-ஹஸன் இக்பால், யாழ்ப்பாணம்
(மூலம்: Middle East Monitor)

ஹஸன் இக்பால்

error: Content is protected !!