Featured Category

சிரியப் புரட்சியை தடம் புரட்டிய அந்த ஏழு இராஜதந்திரப் பிழைகள்

முஹ்தார் ஷங்கீதியின் அவதானங்கள்:
சிரியப் புரட்சி ஸ்தம்பித்துப் போவதற்கு அதனை முகாமை செய்தவர்கள் விட்ட எழு இராஜதந்திரப் தவறுகளே பிரதான காரணமாகும் என பேராசிரியர் முஹ்தார் ஷங்கீதி குறிப்பிடுகிறார். அவை இதோ :

முதலாவது, கருத்தியல் முரண்பாடுகள், அரசியல் சுயலாபங்கள் , தூரநோக்கற்ற திட்டமிடல் என்பன இணைந்து போராட்ட களத்தில் ஓன்றுபட்ட தலைமைத்துவம் அடைந்து கொள்வதற்கு புரட்சிப் படைகளுக்கு முடியாமல் போனது . மேலும், புரட்சிக்காக நிதி , இராணுவ உதவி செய்த நாடுகள் , தமது பலத்தைப் பயன்படுத்தி களத்தில் போராடும் குழுக்களை நிர்ப்பந்தித்து பொது தலைமையின் கீழ் ஒன்றிணைக்க போதுமான முயற்சிகள் எடுக்கவில்லை.

இரண்டாவது, இராஜதந்திர மற்றும் அரசியல் தளத்திலும் ஒன்றுபட்ட அரசியல் தலைமையொன்றை உருவாக்கிக் கொள்வதற்கு புரட்சிக்கு ஆதரவளித்த நாடுகளால் முடியாமல் போனது. விளைவாக, மக்களின் ஒரே குரல் என்ற வடிவத்தை கொடுப்பதற்கும், அதற்கூடாக சர்வதேச சமூகத்தை திசைப்படுத்துவதற்குமான சந்தர்ப்பம் தவறிப்போயின. இதற்கும் புரட்சிக்கு ஆதரவளித்த நாடுகளே பொறுப்புச் சொல்ல வேண்டும். ஏனெனில், அவை அரசியல் பொறிமுறைக்கு ஊடாக சிரியா விவகாரத்தை அணுகுவதனை இரண்டாம் பட்சமாகவே நோக்கி வந்தன. மாறாக, நேரடியாக போரளிக் குழுக்களுடன் உறவாடினார்கள். இதனால், அரசியல் தலைமைகளின் முக்கியத்துவம் சிரிய விவகாரத்தில் பெறுமதி அற்ற ஒன்றாக மாற்றம் கண்டது. மறுபுறம், அரசியல் தலைமைகளும் பல முகாம்களது ஏஜன்டாக தொழிற்பட்டமை நெருப்பில் எண்ணையை ஊற்றும் விடயமாக மாறி விட்டது.

மூன்றாவது,; சிரியப் புரட்சின் அடிப்படைத் தூதினை (ஜனநாயகம் , சுதந்திரம், சமத்துவம்) சுமந்து சென்ற அப்பாவி சிரிய சிவில் சமூகத்தின் மீது மேலதிக பாரமாக ஜிஹாத் குழுக்கள் மாறி விட்டது. ஏனெனில், அவை சிரியாவிற்கு நீதி செய்ய வேண்டும் என்பதனை விட, அதில் ஆதிக்கம் செலுத்தி தனது கருத்தியலை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தன. இதற்கு நல்ல உதாரணம், புடினை எதிர்ப்பதற்கு அடுத்த எல்லையில் உள்ள ரஷ்யாவுக்குல் செல்லாமல், சிரியாவிற்கு வந்து செச்னிய ஜிஹாத் அமைப்புகள் கோசம் போட்டமையாகும். இவ்வாறு, ஸலபி ஜிஹாத் அமைப்புகளின் தூர நோக்கற்ற நகர்வால் சிரியாவின் புரட்சித் தூது குழிதோன்றிப் புதைக்கப்பட்டு, ‘சிரியா தீவிரவாதத்தின் மையம்’ என்ற குற்றச்சாட்டு இலக்காக்கப்பட்டன. எனவே, புரட்சியை தடம் புரட்டியதில் ஸலபி ஜிஹாத் இயக்கங்களும் பொறுப்புச் சொல்ல வேண்டும்.

நான்காவது, , மிகச் சரியாக சிரியப் புரட்சியைக் கையால்வதே ஈரானிய ஆதிக்க அரசியல் விரிவாக்கத்தை தடுப்பதற்கான சரியான தருணம் என்ற உண்மையான புரிதலில் வலைகுடா நாடுகள் செயற்படவில்லை. எந்தளவு வரலாற்றுப் பகை தீர்க்கும் உள்ளுணர்வுடன் ஈரானிய ஆதிக்க அரசியல் நகர்ந்து வருகிறது என அவை சரியாக உள்வாங்கிக் கொள்ளவில்லை. எப்போதும் தனது இலாபத்திற்காக முழு உம்மாவையும் அடகு வைக்கக் காத்திருக்கும் உளவியலைக் கொண்ட தேசமே ஈரான் என்ற உண்மையை வலைகுடா சரியாக இன்னும் விளங்கிக் கொள்ள வில்லை. மட்டுமன்றி, அமெரிக்கா தனது புதிய பிராந்திய இராஜதந்திரத்தை ஈரானை வைத்து கட்டமைக்க முனைகிறது என்பதனையும் வலை குடா இன்னும் கிரகித்துக் கொள்ளவில்லை. குறைந்த பட்சம் ஈராக் யுத்தத்தின் பின்னரான அமெரிக்க நகர்வுகளிருந்தாவது அதனை அவர்கள் புரிந்திருக்க வேண்டும். மேற்கூறப்பட்ட அனைத்தையும் சரியாகப் புரிந்து கொண்டிருப்பின் , சிரியப் புரட்சியை இன்னும் கச்சியதமாகவும், நேர்த்தியாகவும் அது கையாண்டிருக்கும்.

ஜந்தாவது, புரட்சியை ஆதரித்த சகல நாடுகளும் ‘புரட்சியை முகாமை செய்வதில்’ அமெரிக்காவை சார்ந்தே நின்றார்கள். அமெரிக்கா விதித்த சிவப்புக் கோடுகளைத் தாண்டிச் செல்வதற்கு அவை தைரியம் பெறவில்லை. ஆனால், ‘புரட்சி முடிவடையக் கூடாது. யாரும் வெற்றி பெறவும் கூடாது , தோல்வியடையவும் கூடாது’ என்ற இஸ்ரேலின் நலனை மையப்படுத்திய தத்துவத்திலேயே சிரிய விவகாரத்தை அமெரிக்கா அணுகியது. இறுதியில் தன்னைச் சார்ந்து நின்ற புரட்சியை ஆதரித்த சகல நாடுகளினதும் உழைப்பை குடிப்பதையும், அவற்றை களைப்படையச் செய்வதனையும் அமெரிக்க கச்சிதமாக செய்து முடித்தது. மட்டுமன்றி, ஓரளவுக்கு மேல் புரட்சியாளர்கள் பலமடைவதனை விட்டும் அமெரிக்கா கவனமாக காய் நகர்த்திச் சென்றது. இவ்வாறு முடமாக்கப்பட்ட புரட்சியாளர்களை வேட்டையாடுவதற்கு ரஷ்யாவுக்கு வழியமைத்துக் கொடுத்தது அமெரிக்கா. எனவே, புரட்சியை முகாமை செய்வதில் குறைந்த பட்ச சுதந்திரத்தைக் கூட எடுத்துக் கொள்ளாமல் , முழுமையாக அமெரிக்காவுக்காக புரட்சி ஆதரவு நாடுகள் காத்திருந்தமையானது, புரட்சியை தோல்வியடையச் பிரதான இராஜதந்திர பிழையாகும்

ஆறாவது, சிரியாவின் புரட்சியை வழிநடாத்துவதில் துருக்கி விட்ட பிழைகளும் கூட, புரட்சியை தடம் புரளச் செய்வதில் பங்களித்துள்ளது. ஏனெனில், சிரியப் புரட்சியை , அதன் உண்மையான பருமனுடன் துருக்கி மதிப்பீடு செய்யவில்லை. ஆரம்பமாக, மனிதநேய நோக்கில் சிரியப் புரட்சியை அது அணுகின. பின்பு, தனது குறுகிய தேசிய நலனை மையப்படுத்தி விடயத்தை கையாளும் நிலைக்கு அது தள்ளப்பட்டது. இந்நிலை ஏற்படுவதற்கான முதன்மைக் காரணம், புரட்சியை சரியான திசையில் நகர்த்திச் செல்வதற்கும், அதன் எதிர்காலத்திற்கும் தனது முக்கியத்துவத்தை , புவியியல் வகிபாகத்தை , அகன்ற ஆளுமையை துருக்கி சரியாக புரிந்து கொள்ளாமையாகும். விளைவாக, தேவைக்கதிமான கட்டுப்பாடுகளை தனக்கே அது விதித்துக் கொண்டது. அச்சம் கொண்டது. உதாரணமாக, மேற்குலகு தனக்கெதிராக சதி செய்கிறது , குர்துகளது கை ஓங்கினால் தனது உள்நாட்டு பாதுகாப்பு பாதிப்படையும் போன்ற அளவுக்கதிகமான அச்சம் , சிரியாவில் அதன் உண்மையான வகிபாகத்தை நிறைவேற்றுவதனை விட்டும் துருக்கியை தடுத்து விட்டன. தனது எல்லை வரை விரிந்து பரவப் போகும் ஈரானிய இராணுவக் குழுக்களை விட குர்துகள் துருக்கிக்கு பாரிய அழுத்தத்தை தந்து விட முடியாது என்பதனை அது புரிந்து கொள்ளவே இல்லை.

சுருக்கமாக, சிரியப் புரட்சியை மிகவும் நேர்த்தியாக துருக்கியால் கையாண்டிருக்க முடியும். ஆனால், மிகை அச்சம் , அளவுக்கதிமான எச்சரிக்கை உணர்வு என்பன துருக்கியை சரியான தெரிவுகளை நோக்கிச் செல்வதற்கு விடவில்லை. மட்டுமன்றி, துருக்கியின் ஆளுமை என்பது பிராந்தியத்தில் வீரியமாக தலையீடு செய்வதிலேயே தங்கியுள்ளது என்பதனை அங்காரா இன்னும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. இது சிரியப் புரட்சியை ஸ்தம்பிக்கச் செய்வதில் துருக்கி விட்ட இராஜதந்திர தவறாகும்.

எழாவது , துருக்கியின் பிரமாண்டமான இராணுவத்திற்கும் , அரபுலகில் கொட்டிக் கிடக்கும் பணத்திற்கும் முன்னால் அலப்போ தோல்வியடைந்திருக்கிறது. உண்மையில், இது ஸூன்னி உலகின் அரசியல் நகர்வுகளில் ஆழமான இராஜதந்திர திட்டமிடல் கோளாருகள் காணப்படுகிறது என்பதனையே சுட்டிக் காட்டுகிறது. மேலும், இன்று உலகில் சீயாக்கள் சீயாக்களுடன் மோதவில்லை. அலவீக்கள் அலவீக்களுடன் மோதவில்லை. யூதர்களுடன் யூதர்களுடன் மோதவில்லை. ஆனால், ஸூன்னீக்கள் ஸூன்னீக்களை பழிதீர்க்கும் ஒன்று மட்டுமே புறநடையாக உலகில் நடைபெறுகிறது. இதுதொடரும் வரை ஸூன்னி உலகம் இராஜதந்திர தோல்வியிலிருந்து மீண்டு வர முடியாது.

இறுதியாக, அலப்போ வீழ்ச்சியடையவில்லை. இறுதிவரை அது வீரத்துடன் போரடியிருக்கிறது. தன்னால் சுமக்க முடியாது ஒரு போரை சுமந்து, வகுத்துக் கொண்ட இலக்கை அடைய இழக்க வேண்டியதையெல்லாம் இழந்து விட்டது. உண்மையில், முஸ்லிம் உம்மாவின் திசையற்ற போக்கை தெளிவாக சுட்டிக் காட்டி வி;ட்டு சென்றிருக்கிறது அலப்போ. எனவே, அலப்போவின் வீழ்ச்சியை மேலோட்டமாக அலச முடியாது. ஆழமாக அதன் வேர்களைத் தேடிச் செல்ல வேண்டும். முழுமையானதொரு இராஜதந்திர மீள்விசாரனையொன்றை துவக்க வேண்டும். முழுமைத்துவமிக்க புதிய பாதையையொன்றை கண்டடைய வேண்டும். வெறுமனே இழந்ததற்காக ஓலமிடுவதில் எந்தப் பயனுமில்லை.

 

-ஸகி பவ்ஸ்

ஸகி பவ்ஸ்

error: Content is protected !!