Featured Category

சிரியா: அமெரிக்காவின் தாக்குதலுக்கு  ரஷ்யா பதிலளிக்குமா?

ரு வாரமாக வெற்றாரவார டுவிட்டர் பதிவுகளினூடாக ரஷ்யாவுடன் பேச்சளவில் மோதல்களில் ஈடுபட்டு வந்த அமெரிக்கா இறுதியில் ஏப்ரல் 14 சனிக்கிழமை சிரியா மீதான ஏவுகணைத் தாக்குதல்களை ஆரம்பித்தது. சிரிய தலைநகர் டமஸ்கஸில் அமைந்துள்ள இரசாயன ஆயுதங்க உற்பத்தி நிலையங்கள் என சந்தேகிக்கப்படும் நிலைகள் மற்றும் ஹோம்ஸ் மாகாணத்தின் பல பிரதேசங்களை நோக்கியும் அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் நாடுகள் ஒன்றிணைந்து பல்முனை வான் தாக்குதல்களை அரங்கேற்றியுள்ளன.
சிரியா மீது உக்கிரமான இராணுவ நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தாலும் கூட நடாத்தப்பட்ட தாக்குதல்களின் வீரியம் சொல்லும்படியாக அமையவில்லை. அமெரிக்காவினால் உத்தேசிக்கப்பட்ட வகையில் சிரிய நிலைகள் மீது எத்தனை எண்ணிக்கையான ஏவுகணைகள் ஏவப்பட்டன என்பது தொடர்பில் ஒன்றுகொன்று முரணான தகவல்கள் வந்த வண்ணமிருப்பது ஒரு புறமிருக்க, குறித்த ஏவுகணைத் தாக்குதல்கள் சிரிய இராணுவ நிலைகள் மீதான பாரிய சேதங்களை ஏற்படுத்தவோ, உயிழப்புக்களை ஏற்படுத்தவோ தவறியுள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது.

இன்னும் சொல்லப் போனால், சிரியாவின் T-4 இராணுவ நிலைகள் மீதான அண்மைய இஸ்ரேலிய வான் தாக்குதல்களுடன் ஒப்பிடுகையில் ஏப்ரல் 14 தாக்குதல்கள் ஏற்படுத்தியுள்ள அழிவுகள் குறைவானவையே.

ஏலவே 2017 ஏப்ரல் மாதமளவில் சிரியாவின் இத்லிப் மாகாணத்தைச் சேர்ந்த கான் ஷெய்க்கவுன் பிராந்தியம் மீது சிரிய அரசு படைகள் இரசாயனத் தாக்குதல்களை நிகழ்த்தியிருந்தன. இதற்கு பதிலடியாக அப்போது அமெரிக்கா சிரிய அரசு படைகளின் காத்திரமான இராணுவ நிலைகள் மீது குறிப்பாக ஷைராட் நிலைகள் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நிகழ்த்தியிருந்தது.

அமெரிக்காவின் தாக்குதலுக்கு அத்தருணமும் கூட  பிரித்தானியாவும் பிரான்ஸும் ஆதரவு வழங்கியிருந்தன. இவ்வகையில் அன்றும் இன்றும் சிரியா மீதான அரசியல் நிலைப்பாடு தொடர்பில் அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் நாடுகள் ஒன்றித்து இயைந்து இயங்குகின்றன எனலாம்.

ஆனால், இந்த முறை சிரிய அரசு இரசாயனத் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளமை தொடர்பில் அமெரிக்கா சிரிய அரசை மாத்திரம் குற்றம் காணாது, சிரிய அரசின் இராணுவ நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்கி வரும் ரஷ்யாவுக்கும் சேர்த்தே எதிர்ப்பை தெரிவித்து வருகின்றது. சிரிய விவகாரம் தொடர்பில் அமெரிக்காவின் ரஷ்ய எதிர்ப்பு நிலைப்பாடு சர்வதேச ரீதியில் பதற்ற நிலைகளை அதிகரித்துள்ளதுடன், அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் நேரடி யுத்தங்கள் ஏற்பட வழிவகுக்குமா எனும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனினும், அரசியல் அவதானிகள் ஏலவே எதிர்வுகூறியிருந்ததற்கமைய அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான நேரடி தாக்குதல்கள் தவிர்க்கப்பட்டுள்ளன. அத்துடன் அமெரிக்காவின் குறித்த இராணுவ நடவடிக்கைகள் அனைத்தும் யதார்த்தமற்ற நாடக அரங்கேற்றம் போன்றே நடந்தேறியுள்ளது.

அமெரிக்காவின் ஏவுகணைகளும் அசாத்தின் கணிப்பும்

சிரிய விவகாரம் தொடர்பில் அண்மையில் எழுந்துள்ள அதிரடியான அதிர்வலைகள் மூலம் அதிக அனுகூலங்களை பெற்றுக் கொள்ளும் தரப்பாக சிரிய அரசும் அதன் நட்பு நாடுகளும் திகழ்கின்றது.

சிரியா மீதான அமெரிக்காவின் ஆயுத நகர்வின் பின்னரும் கூட சிரிய கள நிலைவரத்தில், அதிகார சமலநிலையில் எவ்வித காத்திரமான மாற்றங்களும் ஏற்பட்டதாக இல்லை; சிரிய அரசுக்கு விசுவாசமான படைகள் குறித்துச் சொல்லக்கூடிய இழப்புக்களை அனுபவித்துள்ளதாகவும் இல்லை.

அமெரிக்கா சிரியாவின் இராணுவ நிலைகள் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நிகழ்த்தி சில மணிநேரங்களின் பின்னர் சிரிய ஜனாதிபதி பஷார் அல்அசாத் , டமஸ்கஸில் அமைந்துள்ள தனது செயலகத்திற்கு வெற்றிக்களிப்புடன் வருகை தருவதைக் காண்பிக்கும் காணொளிக் காட்சியொன்றை இணையத்தில் பதிவேற்றியதன் மூலம் சமூக வலைத்தள அரசியலுக்குள் அவரும் நுழைந்துள்ளார். சிரிய பிரஜைகள் கொண்டாட்டத்தில் ஈடுபடும் காட்சிகளையும் உள்நாட்டு மற்றும் சர்வதேச ஊடகங்கள் காண்பித்தன.

ஊடக கணிப்புக்களின் நாடி நரம்பை வெகுவாகவே அறிந்தவராக பஷார் அல்அசாத் திகழ்கிறார் என்றே தோற்றுகிறது. ஏலவே கடந்த வருடம் சிரிய அரசு தம் மக்கள் மீது இரசாயனத் தாக்குதல்களை நிகழ்த்தியபோதும் ‘கொதித்தெழுந்த’ அமெரிக்கா அதிரடியாக சிரியாவின் ஷைராட் இராணுவ நிலைகள் மீது வான் தாக்குதல்களை நிகழ்த்தியது.

அமெரிக்காவின் குறித்த அதிரடி முன்னெடுப்பானது சர்வதேச அரங்கில் அதிர்ச்சியைத் தோற்றுவித்திருந்ததுடன் சிரியா மீது அமெரிக்கா தொடர்ந்தும் மேலதிக இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு நிரந்தர தீர்வொன்றுக்கு வழிவகுக்கும் என ஊடக உலகில் எதிர்வுகூறப்பட்டிருந்தது. ஆனால், அதன் பின்னர் அமெரிக்கா எதுவித காத்திரமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாது தணிந்து போனது.

அதுபோலவே இவ்வருடமும் அமெரிக்காவின் குறித்த தோல்வியுற்ற ஏவுகணைத் தாக்குதல்கள் கூறுவது யாதெனில், சிரிய மக்களின் நலன்களை அடிப்படையாக கொண்ட தீர்மானங்களை விடுத்தும் வெறுமனே வெற்று வீராவேசத்துடன் இயங்குவதையும் கண்துடைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதையுமே வெள்ளை மாளிகை குறிக்கோளாகக் கொண்டுள்ளது.

சிரியா மீதான அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகளும் ஆயுத நகர்வுகளும் தொடர்பில் வெள்ளை மாளிகையின் வெற்றுப் பேச்சுக்கள் வெறுமனே சர்வதேச ரீதியில் சுயமதிப்பை அதிகரித்துக் கொள்வதற்கே அன்றி, சிரியாவின் அப்பாவிப் பொதுமக்களின் நலன்களை நோக்காகக் கொண்டவை அல்ல என்பதை ஊகித்தறியலாம்.

சிரிய நெருக்கடியைத் தீர்த்து வைப்பது தொடர்பிலோ, தமது இரசாயன ஆயுத பிரயோகங்களை, உற்பத்திகளை தடுத்து நிறுத்துவது தொடர்பிலோ எதுவித காத்திரமான பொறிமுறைகளையோ அல்லது உள்நோக்கங்களையோ அமெரிக்கா கொண்டிருக்கவில்லை என்பதை பஷார் அல்அசாத் தெள்ளத் தெளிவாகவே அறிந்து வைத்துள்ளார் என்றே கருத வேண்டியுள்ளது. 

அமெரிக்காவின் போலி கரிசனையும் ரஷ்யாவின் அணுகுமுறையும்

கடந்த வருடம் இடம்பெற்ற சிரியாவின் ஷைராட் இராணுவ நிலைகள் மீதான அமெரிக்காவின் தாக்குதல்கள் ட்ரம்ப் எதிர்கொண்டிருந்த உள்நாட்டு அழுத்தங்களுக்கான உடனடி தீர்மானம் என்பதை ரஷ்யா அறிந்திருந்தது.

அண்மைய அமெரிக்க தாக்குதலும்கூட வெறுமனே கண்துடைப்பு தாக்குதலே தவிர, டூமா பிரதேசத்தில் சிரிய அரசு படைகள் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தி நிகழ்த்திய தாக்குதலுக்கான பதிலடி அல்ல என்பதையும் ரஷ்ய தலைமை அறிந்தே வைத்துள்ளது.

சிரியாவின் உள்நாட்டு நெருக்கடிகளுக்கு நிரந்தர தீர்வு காண்பது தொடர்பில் அமெரிக்காவுக்கு எதுவித கரிசனைகளும் இல்லை. மாறாக, தனது ஆயுத பலத்தை உலகுக்கு காட்சிப்படுத்தவே அது முனைகிறது என ரஷ்யா நம்புகிறது.

சிரிய அரசு படைகள் இரசாயன ஆயுத தாக்குதல்களில் ஈடுபட்டமைக்கு பதிலடியாக சிரியா மீதான தாக்குதல்களை அமெரிக்கா முன்னெடுப்பதற்கு சிறிது கால அவகாசத்தை கடைப்பிடித்தது. இக்கால தாமதமானது அமெரிக்காவின் பலவீனத்தையும் பின்னடைவையும் வெளிக்காட்டியுள்ளதாக கருதும் ரஷ்ய தலைமை அதனை தமது பலமாகவும் தன்னம்பிக்கை அளிக்கும் காரணியாகவும் எடுத்துக் கொண்டுள்ளது.

சிரியாவின் இரசாயன ஆயுத தாக்குதலுக்கும் அதற்கு பதிலடியான அமெரிக்காவின் தாக்குதலுக்கும் இடைப்பட்ட நாட்களில் ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் சூடான வாதங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

இதன் மூலம் சிரியா மீதான அமெரிக்காவின் தாக்குதலின்போது சிரியாவில் நிலைகொண்டுள்ள தமது இராணுவ படைகளுக்கோ நிலைகளுக்கோ எதுவித பாதிப்புக்களும் ஏற்படாதவண்ணம் ரஷ்யா அமெரிக்காவுக்கு தயக்கத்தை உண்டுபண்ணும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டது.

சிரியா மீதான தாக்குதலுக்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக அமெரிக்காவுடன் ரஷ்யா கலந்தாலோசனையில் ஈடுபட்டு தமது இராணுவ நிலைகளைப் பாதுகாத்துக் கொண்டுள்ளமை நிதர்சனம். எந்தளவுக்கெனில், அமெரிக்காவின் சிரியா மீதான தாக்குதல் நடைபெற்ற தினம் ஜனாதிபதி அசாத்தை சந்திக்க சிரிய தலைநகர் டமஸ்கஸுக்கு ரஷ்யாவின் ஆளும் கட்சியின் பொதுச்செயலாளர் அன்றீ துர்சாக் வருகை தந்துள்ளார். அமெரிக்காவின் தாக்குதல்கள் ரஷ்யாவை நேரடி இலக்காகக் கொண்டிருப்பின், எவ்வித அச்சமுமின்றி குறித்த ரஷ்ய பிரமுகரின் சிரிய விஜயம் இடம்பெற்றிருக்க மாட்டாது.

இறுதியில் அமெரிக்காவின் சிரியா மீதான உறுதியான நிலைப்பாடுகளற்ற, சடங்கு ரீதியான ஏவுகணைத் தாக்குதல்கள் இரு பெரும் வல்லரசு நாடுகளினதும் இறுக்கங்களை சுமுகமாக்கிக் கொள்ள வழிவகுத்துள்ளன. அதேவேளை சிரியாவில் நிலவிவரும் உள்நாட்டு போரில் ரஷ்யா கொண்டுள்ள நிலைப்பாடு கிஞ்சிற்றும் மாறவில்லை. அமெரிக்கா தனது கௌரவ நன்மதிப்பை தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியாக சிரியா மீதான கண்துடைப்புத் தாக்குதல்களை அடையாளப்படுத்தலாம்.

 

இஸ்ரேலிய தாக்குதலும் ரஷ்யாவின் தந்திரோபாயமும்

சிரியா மீதான அமெரிக்காவின் தாக்குதல்கள் காத்திரமானதாக அன்றி வலுவிழந்ததாக இருந்தன. எனினும், தாக்குதலுக்கு முன்னராக அமெரிக்காவின் எச்சரிக்கைகளும் அச்சுறுத்தல்களும் அபரிமிதமாக காணப்பட்டமை பல அரசியல் உள்நோக்கங்களைக் கொண்டது.

மத்திய கிழக்கு நெருக்கடி தொடர்பில் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் நேரடி மோதல்கள் உருவாகும் எனும் எதிர்பார்ப்பானது, சிரிய உள்நாட்டுப் போரில் ரஷ்யா 2015 இல் நேரடியாக தலையீடு செய்யத் தொடங்கியது முதல் நிலவி வருகிறது.

இவ்வருட ஆரம்பத்தில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தனது தேசத்துக்கான உரையில் குறிப்பிடுகையில், ரஷ்ய இராணுவ நிலைகள் மீது அமெரிக்கா எவ்வகையிலேனும் இடர்களை ஏற்படுத்த முனையுமாக இருந்தால் பதில் தாக்குதல்கள் எவ்வித தயக்கமுமின்றி நடத்தப்படும் என எச்சரித்திருந்தார்.

இதே மாதிரியான எச்சரிக்கைகளை சிரியா மீதான அமெரிக்காவின் ஏப்ரல் 14 தாக்குதல்களுக்கு முன்னதாகவும் ரஷ்யா விடுத்திருந்தது. ரஷ்ய இராணுவ தளபதி வலேரி கெராஸிமோ முன்னதாக ‘சிரியாவில் நிலைகொண்டுள்ள ரஷ்ய துருப்புக்களுக்கு அபாயத்தை விளைவிக்க அமெரிக்கா முனையுமாக இருந்தால் அமெரிக்கா மீது பதிலடித் தாக்குதல்கள் நடாத்தப்படும்’  என பகிரங்க எச்சரிக்கை விடுத்திருந்தார்.

சிரியாவில் நிலைகொண்டுள்ள ரஷ்ய படைகள் மீது இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள அமெரிக்கா தீர்மானிப்பதாக வைத்துக் கொண்டாலும்கூட பதில் தாக்குதல் நடத்தப்படும் என வெற்றுக் கூச்சல் எழுப்புவதைத் தவிர்த்து ரஷ்யாவினால் மேலதிக நடவடிக்கைகளை நோக்கி நகர முடியாது என்பது நிதர்சனம்.

சிரியா மீதான கடந்த வருட தாக்குதலின்போதும் அமெரிக்கா மீது ரஷ்யா எவ்வித பதில் தாக்குதல்களையும் நிகழ்த்த துணியவில்லை. ஆரவாரமான அச்சுறுத்தல்கள் எச்சரிக்கைகளை விடுப்பதோடு மாத்திரம் ரஷ்யா நிறுத்திக் கொள்ள முனைகிறது. தனது எல்லையைத் தாண்டி அமெரிக்காவுடன் நேரடி மோதலை உருவாக்கிக் கொள்ள ரஷ்ய தலைமைகள் ஒருபோதும் விரும்புவதில்லை என்பது கண்கூடு.

சிரிய மண்ணில் அமெரிக்காவை எதிர்த்து நேரடித் தாக்குதல்களில் ரஷ்யா ஈடுபடுமானால், அமெரிக்க, பிரித்தானிய, பிரான்ஸிய கூட்டணிப் படைகளின் மேலோங்கிய ஆயுத பலத்திற்கு ஈடுகொடுக்க முடியாது தோல்வியைச் சந்திக்க நேரிடும் என்பது உறுதி.

சிரியா மீதான இஸ்ரேலின் தொடர் வான் தாக்குதல்களை எதிர்க்காது, எவ்வித துலங்கல்களையும் காண்பிக்காது கண்டும் காணாததுபோல் சிரியாவின் நெருங்கிய நட்பு நாடான ரஷ்யா நடந்து கொள்வதற்கும் இதே விதமான களப் பின்னணியே காரணமாக அமைந்துள்ளது.

கடந்த ஆறு மாதங்களாக சிரியாவின் இராணுவ நிலைகள் மற்றும் இராணுவ உட்கட்டமைப்பு வசதிகளை இலக்கு வைத்து இஸ்ரேல் தொடர் வான் தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றது.

கடந்த செப்டெம்பர் மாதம் சிரியாவின் ஹமா மாகாணத்தில் அமைந்துள்ள ஆயுத உற்பத்தி நிலையமொன்றின் மீதும், ஒக்டோபரில் டமஸ்கஸ் பகுதி மீதும், டிசம்பரில் டமஸ்கஸுக்கு அண்மையில் அமைந்துள்ள ஆயுத களஞ்சியம் மீதும் இஸ்ரேலிய யுத்த விமானங்கள் தாக்குதல்களை நடத்தியிருந்தன.

அத்துடன் இவ்வருட ஆரம்பத்தில் ஜனவரி, பெப்ரவரி மாதங்களில் சிரியாவில் நிலைகொண்டுள்ள ஈரானிய இராணுவ நிலைகள் மீது தாக்குதல்களை நிகழ்த்தின. அண்மையில் ஏப்ரல் 9 இல் சிரியாவின் ஹோம்ஸ் மாகாணத்தின் T-4 இராணுவ நிலைகள் மீது மேற்கொண்டிருந்த வான் தாக்குதலில் ஈரானிய படையினர் பலர் கொல்லப்பட்டிருந்தனர்.

மேற்குறித்த இஸ்ரேலிய தாக்குதல்களின்போது சிரியாவில் நிலைகொண்டுள்ள ரஷ்ய படைகள் எவ்விதமான பதில் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாது மௌனித்திருந்தன. S-300, S-400 போன்ற பலம் வாய்ந்த ஏவுகணை முறியடிப்பு பொறிமுறைகளை சிரியாவில் நிறுவியிருந்தபோதும் இஸ்ரேலை நேரடியாக எதிர்த்தால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு அஞ்சி கண்டும் காணாததுபோல் ரஷ்யா அமைதி காத்தது.

ஆக, சிரியா நெருக்கடி தொடர்பில் ரஷ்யா பின்பற்றும் தந்திரோபாய நகர்வுகள் அப்பட்டமானவை; களத்தில் எதிரி நாடுகள் மீது காத்திரமான தாக்குதல்களை மேற்கொள்ளாது, பேச்சளவில் எச்சரிக்கைகளை விடுத்த வண்ணம் ரஷ்யா செயற்பட்டு வருகின்றமையை அவதானிக்க முடியுமாகவுள்ளது.

சிரிய யுத்த களத்தில் ரஷ்ய, அமெரிக்க தரப்பு நேரடியாக தம்மிடையே பதற்றங்களை இதுவரை ஏற்படுத்திக் கொள்ளவில்லை என்பது உண்மையெனினும், இதே நிலைமை தொடர்ந்தும் நீடிக்கும் என எதிர்வுகூறவும் முடியாதுள்ளது.

இரு தரப்பிலுமுள்ள பாசாங்குக்காரர்களின் நடத்தையில் எதிர்வுகூற முடியாத சடுதி மாற்றங்கள் அண்மைக் காலமாக அதிகரித்து வருவதாகவும், பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திர தீர்வுகளை நோக்கி நகரும் மனப்பாங்கில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாகவும் எதிர்காலத்தில் நிலைமைகள் மோசமடையவும் கூடும் என அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.

தமிழில்: ஹஸன் இக்பால், யாழ்ப்பாணம்

மூலம்: அல்ஜஸீரா

நன்றி – அல் ஹஸனாத்

ஹஸன் இக்பால்

error: Content is protected !!