Featured Category

ஜெருசலத்தின் அமெரிக்கத் தூதரகமும் பற்றி எரியும் பலஸ்தீனமும்!

டந்த வருட இறுதியில் ஜெரூசலத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பதாகவும் இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதரகத்தை டெல்அவிவ் நகரிலிருந்து ஜெரூசலத்திற்கு இடமாற்றப் போவதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தியோகபூர்வ அறிவிப்பொன்றை விடுத்திருந்தார்.
அதற்கமைய கடந்த திங்கட்கிழமை இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதரகம் ஜெரூசலம் நகரில் சர்வதேச நாடுகளினதும் பலஸ்தீனர்களினதும் பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் திறந்து வைக்கப்பட்டது.

தூதரக திறப்பு விழாவில் பதிவு செய்யப்பட்ட காணொளி மூலம் உரையாற்றிய அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், ‘வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததும் புனிதமிகு நகருமான ஜெரூசலத்தில் இன்று அமெரிக்காவின் உத்தியோகபூர்வ தூதரகத்தை ஆரம்பித்து வைத்துள்ளோம். இதன் மூலம் இஸ்ரேலின் தலைநகராக ஜெரூசலத்தை உத்தியோகபூர்வமாக மீளவும் வலியுறுத்துகிறோம். திட்டமிட்டதற்கு பல வருடங்களுக்கு முன்னதாகவே இதனை நாம் செயற்படுத்தியுள்ளோம்’ என தெரிவித்துள்ளார். அத்துடன் பலஸ்தீன், இஸ்ரேல் முறுகல் நிலைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும் முயற்சிக்கு அமெரிக்கா எப்போதும் துணை நிற்கும் எனவும் உரையில் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் தலைநகராக ஜெரூசலத்தை அமெரிக்கா அங்கீகரித்தமை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் பெரும்பாலான அங்கத்துவ நாடுகள் முன்னதாக எதிர்ப்புத் தெரிவித்திருந்தன. ஜெரூசலம் நகரானது யூதர்கள், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் பொதுவான புனித பூமியாக திகழ வேண்டும் என்பதுடன் இறுதி முடிவுகள் பேச்சுவார்த்தை மூலமே எட்டப்பட வேண்டும் என சர்வதேச நாடுகள் வலியுறுத்தியிருந்தன. அத்துடன் முறுகல் நிலைக்கு மத்தியில் இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதரகத்தை ஜெரூசலத்தில் நிறுவுவது பிராந்தியத்தில் மேலும் பாரிய முரண்பாடுகளுக்கு இட்டுச் செல்லும் என சர்வதேச நாடுகள் கூறியிருந்தன.

ஜெரூசலத்தில் இடம்பெற்ற அமெரிக்கத் தூதரகத் திறப்பு விழா நிகழ்வுக்கு 86 நாடுகள் அழைக்கப்பட்டு இருந்ததாகவும் 32 நாடுகளே சமுகமளித்து இருந்ததாகவும் இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

 

இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம் பின்வரும் நாடுகள் மாத்திரமே  ஜெரூசலத்தில் இடம்பெற்ற அமெரிக்கத் தூதரக திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்டுள்ளன:

அல்பேனியா, அங்கோலா, ஒஸ்திரியா, கமரூன், கொங்கோ குடியரசு, கொங்கோ ஜனநாயக குடியரசு, ஐவரி கோஸ்ட், செக் குடியரசு,  டொமினிக்கன் குடியரசு, எல்சல்வடோர், எத்தியோப்பியா, ஜோர்ஜியா, கௌதமாலா, ஹொந்துராஸ், ஹங்கேரி, கென்யா, மியன்மார், மாக்கடோனியா, பனாமா, பெரு, பிலிப்பைன்ஸ், ரோமானியா, ருவாண்டா, செர்பியா, தெற்கு சூடான், தாய்லாந்து, உக்ரேய்ன், வியட்நாம், பரகுவே, தன்சானியா, சாம்பியா

 

பலஸ்தீன பேரணி மீதான இஸ்ரேலின் கொடூர தாக்குதல்கள்:

ஜெரூசலத்தில் அமெரிக்கா தனது தூதரகத்தை ஆரம்பித்து வைத்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து காசா எல்லையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பலஸ்தீனர்களை நோக்கி இஸ்ரேலிய படைகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் 60 க்கும் பலஸ்தீனர்கள் பலியாகியுள்ளதுடன் 3,000 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

2014 காசா யுத்தத்துக்கு பின்னர் ஒரே நாளில் அதிகமான எண்ணிக்கையானோர் பலியான தொகையாக இது பதிவாகியுள்ளது.

இதேவேளை ஜெரூசலத்தில் இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதரகம் திறந்து வைக்கப்பட்டமை குறித்து இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு குறிப்பிடுகையில், ‘அமெரிக்கா இஸ்ரேலின் மிகச் சிறந்த நட்பு நாடாகும். அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் உலகின் எந்தவொரு தலைவரை விடவும் காத்திரமான வகையில் இஸ்ரேலின் மீது கரிசனை கொண்டுள்ளார். ஜெரூசலத்தை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா உத்தியோகபூர்வமாக அங்கீகரித்துள்ள இன்றைய நாள் வரலாற்று முக்கியத்தும் மிகுந்த நாளாகும். ஜெரூசலம் எமது உரிமையாகும். எமது படை வீரர்கள் இதனை எதிரிகளிடம் இருந்து பாதுகாத்து வருகின்றனர்’ என அமெரிக்காவை சிலாகித்தும் அட்டூழியங்களில் ஈடுபட்டு வரும் இஸ்ரேலிய படைகளைப் போற்றியும் உரையாற்றியுள்ளார்.

1948 இல் இஸ்ரேலினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு அகதிகளாக்கப்பட்ட பலஸ்தீனர்களின் பேரணி ஒன்றரை மாதங்களாக காசா எல்லைப் பகுதியில் இடம்பெற்று வருகின்றது. மார்ச் 30 முதல் இடம்பெற்று வரும் நில தின போராட்டங்களில் இதுவரை இஸ்ரேலிய படைகளினால் 100 க்கும் மேற்பட்ட பலஸ்தீனர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதுடன் 12,000 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

ஜெரூசலத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள அமெரிக்கத் தூதரகத்தைச் சுற்றி 1,000 இற்கும் மேற்பட்ட ஆயுதம் தாங்கிய இஸ்ரேலிய படை வீரர்கள் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டு வருவதாக இஸ்ரேலிய பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது. மேலும் ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெரூசலத்திற்கான பிரதான பெருந்தெருக்கள் பாதுகாப்புக் காரணங்களுக்காக மூடப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய ஆளில்லா விமானங்கள், காசாவில் கள நிலைவரங்களை வழங்கி வரும் அல்ஜசீரா உள்ளிட்ட ஊடகவியலாளர்களை குறிவைத்து தாக்குதல் நடாத்தி வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அல்ஜசீராவின் செய்தித் தொடர்பாளர் ஹுதா அப்துல் ஹமீத் ஏனைய ஊடகவியலாளர்களுடன் இணைந்து களத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது இஸ்ரேலிய ஆளில்லா விமானம் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் பாதிப்புக்குள்ளான அல்ஜசீராவின் செய்தித் தொடர்பாளர் ஹுதா அப்துல் ஹமீத் உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டதாக அல்ஜசீரா அறிவித்துள்ளது.

 

படுகாயமுற்ற பலஸ்தீன போராட்டக்காரர்களினால் நிரம்பி வழியும் காசா அல்ஷிபா மருத்துவமனை:

காசா எல்லையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் பலஸ்தீனர்கள் மீது இஸ்ரேலிய படைகள் வன்முறையை கைக்கொண்டு கலைக்க முயற்சிப்பதால் பெருமளவான உயிர்ச் சேதங்களுடன் பலர் படுகாயங்களுக்குள்ளாகி வருகின்றனர். காயமுற்ற பலஸ்தீனர்கள் காசா அல்ஷிபா பிரதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மட்டுபடுத்தப்பட்ட மருத்துவ வசதிகளை மாத்திரமே கொண்டுள்ள காசா மருத்துவமனை காயமுற்றோர்களினால் நிரம்பி வழிகின்றது.

இஸ்ரேலிய படையினரின் தாக்குதல்களில் உயிரிழந்த மற்றும் காயமுற்ற தமது குடும்ப உறுப்பினர் மற்றும் உறவினர்களைக் காணும் பொருட்டு அல்ஷிபா மருத்துவமனை வளாகம் சனத்திரள்களாலும் ஊடகவியலாளர்களாலும் நிறைந்துள்ளதாக அல்ஜசீரா செய்தித் தொடர்பாளர் தெரிவிக்கின்றார். மருத்துவமனையில் போதிய இடவசதியின்மையால் படுகாயமுற்று இரத்தக் காயங்களுடன் மக்கள் மருத்துவமனை முன்றலில் சிகிச்சைக்காக காத்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அல்ஷிபா மருத்துவமனையின் உயர் அதிகாரி அய்மன் அல்சஹபானி அல்ஜசீராவுக்கு தெரிவிக்கையில், திங்கட்கிழமை அன்று சிகிச்சைக்காக காத்திருந்த படுகாயமுற்ற போராட்டக்காரர்களில் 18 பேர் உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்கப் பெறாமையால் மரணிக்க நேர்ந்த பரிதாபமும் நிகழ்ந்துள்ளதாக கூறுகின்றார்.

‘ஒரே நேரத்தில் 500க்கும் மேற்பட்ட காயமுற்றோர் சிகிச்சைக்காக கொண்டுவரப்படுகின்றனர். எனினும், அவர்கள் அனைவருக்கும் ஒரே நேரத்தில் மருத்துவ சிகிச்சைகளை வழங்குவதற்கு எமது வைத்தியசாலை போதிய இயலளவைக் கொண்டிருக்கவில்லை. நெஞ்சில் சுடப்பட்டு காயமடைந்தவர்களுக்கே முன்னுரிமை அடிப்படையில் சிகிச்சைகளை வழங்குகின்றோம். கை,கால்களில் சுடப்பட்டு காயமடைந்தவர்கள் இரத்தக் காயங்களுடன் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் நோயாளிகள் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர்’ என தெரிவிக்கின்றார்.

 

பிராந்திய பதற்ற நிலையைத் தோற்றுவித்துள்ள தூதரக இடமாற்றம்:

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நெருங்கிய உறவினரும் சிரேஷ்ட ஆலோசகருமான ஜார்ட் குஷ்னர் குறிப்பிடுகையில், ‘ஜெரூசலத்தில் யூதர்களின் இதயம் போன்றவர்களின் முயற்சியினால் அமெரிக்கத் தூதரகம் வெற்றிகரமாகத் திறக்கப்பட்டுள்ளது. எனினும், இந்நிகழ்வு இஸ்ரேல், பலஸ்தீன சமாதான முயற்சிகளில் இருந்து அமெரிக்கா பின்வாங்குவதாக அமையாது. ஆனால், பலஸ்தீன மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வன்முறையை தூண்டுகின்றனரே தவிர நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்குப் பங்களிப்பதாக இல்லை’ என தெரிவித்துள்ளார்.

பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸின் ஊடகப் பேச்சாளர் நாபில் அபு ருதினியாஹ் குறிப்பிடுகையில், ‘அமெரிக்காவின் குறித்த நகர்வானது இஸ்ரேலுடனான எதிர்கால சமாதான பேச்சுவார்த்தைகளில் மத்தியஸ்தம் வகிக்கும் நிலையில் இருந்து அமெரிக்காவை பின்னகர்த்தியுள்ளது. சர்வதேசத்தின் எதிர்ப்புகளை சிறிதும் கருத்திற் கொள்ளாது அமெரிக்கா மேற்கொண்டுள்ள தான்தோன்றித்தனமான குறித்த நகர்வு சர்வதேசத்தை அவமதிப்பதாக அமைந்துள்ளது. பலஸ்தீன மக்கள் மத்தியில் அமைதியின்மையைத் தூண்டுவதாக அமைந்துள்ளது’ என தெரிவித்துள்ளார்.

பலஸ்தீன அதிகார சபை வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், ‘பலஸ்தீனர்களின் பூமியான ஜெரூசலத்தில் இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதரகத்தை திறந்து வைத்துள்ளதன் மூலம் சர்வதேச சட்டங்களை அமெரிக்கா வெளிப்படையாக மீறியுள்ளது. நீதி மற்றும் சர்வதேச விழுமியங்களுக்கு பாரிய இழுக்கு ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலுடனான சமாதானப் பேச்சுவார்த்தைகளை அர்த்தமற்றதாக மாற்றியுள்ளது. நக்பா தினம் அனுஷ்டிக்கப்படும் இக்காலப்பகுதியில் பலஸ்தீனர்களை மேலும் மன உளைச்சலுக்கு இட்டுச் செல்வதாக அமெரிக்காவின் குறித்த நகர்வு அமைந்துள்ளது’ என தெரிவிக்கப்படுள்ளது.

பலஸ்தீனிய வெளியுறவுத்துறை அமைச்சர் ரியாத் அல்மாலிகி குறிப்பிடுகையில், ‘அமைதியான முறையில் இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின்போது இஸ்ரேலிய படைகள் வன்முறைகளைக் கட்டவிழ்த்து நூற்றுக்கணக்கான பலஸ்தீனர்களை கொலை செய்தமை குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இஸ்ரேலுக்கு எதிராக பலஸ்தீனிய தலைமைகள் முறைப்பாடுகளை மேற்கொள்ள நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. அரப் லீக் நாடுகளின் ஒன்றுகூடலில் இது தொடர்பில் வலியுறுத்தப்படவுள்ளது’ என தெரிவித்துள்ளார்.

எகிப்தின் வெளியுறவுத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் பலஸ்தீன மக்களின் அமைதிப் பேரணி மீது இஸ்ரேலிய படைகள் மேற்கொண்டுள்ள உக்கிர தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

 

இஸ்ரேலிய தூதுவரை நாட்டை விட்டும் வெளியேற்றிய துருக்கி:

துருக்கி ஜனாதிபதி அர்துகான் கூறுகையில், ‘பலஸ்தீன மக்களின் நியாயமான உரிமைக்கும் நீதிக்கும் அமெரிக்கா துரோகமிழைத்துள்ளது. சரித்திரம் இதனை கறுப்புப் பக்கங்களாகவே பதிவு செய்யும். எமது பலஸ்தீன சகோதரர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதியை மனிதாபிமானமுள்ள எவரும் மறந்துவிட மாட்டார்கள். பலஸ்தீனர்களின் நில உரிமை போராட்டங்கள் மீது தாக்குதல்களை நடாத்திவரும் வகையில் இஸ்ரேல் ஒரு மனிதாபிமானமற்ற பயங்கரவாத நாடாக உருவெடுத்துள்ளது. பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகள் முற்றிலும் கண்டனத்துக்குரியது. இஸ்ரேலின் நடவடிக்கைகளை ஆதரித்து வரும் அமெரிக்கா வரலாறுத் தவறை இழைத்து வருகிறது’ என கண்டனம் தெரிவித்துள்ளார்.

துருக்கியின் உள்நாட்டு செய்திகளின் பிரகாரம் கடந்த திங்கட்கிழமை இஸ்ரேலிய படைகளினால் காசாவில் படுகொலை செய்யப்பட்ட பலஸ்தீனர்களுக்கு துக்கம் அனுஷ்டிக்கும் வகையில் துருக்கியில் 3 நாள் தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க தூதரகம் ஜெரூசலத்தில் திறக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து துருக்கி இஸ்தான்புல் நகரில் ஆயிரக்கணக்கானோர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

டெல்அவிவ் மற்றும் வொஷிங்டன் நகர்களிலிருந்து தமது தூதர்களை அவசர சந்திப்பொன்றுக்காக துருக்கி மீள அழைத்துக் கொண்டுள்ளதாக துருக்கியின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் துருக்கியில் உள்ள இஸ்ரேலிய தூதரை அடுத்த அறிவித்தல் விடுக்கும் வரை நாட்டை விட்டும் வெளியேறுமாறு துருக்கி கேட்டுக் கொண்டுள்ளது.

பலஸ்தீன் விவகாரம் தொடர்பில் அவசர கலந்துரையாடல்களை மேற்கொள்ளும் பொருட்டு ஒத்துழைப்புக்கான இஸ்லாமிய அமைப்பின் (OIC) அங்கத்துவ நாடுகளின் ஒன்றுகூடல் ஒன்றையும் துருக்கி இவ்வாரம் ஏற்பாடு செய்துள்ளது.

 

ஹமாஸ் அமைப்பே வன்முறைக்கு வித்திட்டனர் – அமெரிக்கா குற்றச்சாட்டு:

வெள்ளை மாளிகையின் ஊடகப் பேச்சாளர் கூறுகையில், ‘எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்ட பலஸ்தீனர்களை நோக்கி இஸ்ரேலிய படைகள் துப்பாக்கிப் பிரயோகங்களை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு ஹமாஸ் அமைப்பினரின் நடவடிக்கைகளே காரணமாக அமைந்தன. இஸ்ரேலிய படைகளை நோக்கிய ஹமாஸ் போராளிகளின் தாக்குதல்களுக்கு பதில் நடவடிக்கைகளாகவே குறித்த துப்பாக்கிப் பிரயோகங்கள் அமைந்தன.

இதில் 58 பலஸ்தீனர்கள் பலியாகியமை துரதிர்ஷ்டவசமான செயலாகும். எனினும், பதில் தாக்குதல்களை நிகழ்த்துவதற்கு இஸ்ரேலுக்கு முழு உரிமையும் உண்டு. தற்காப்பு தாக்குதல்களில் பலஸ்தீனர்கள் பலியாகியுள்ளமை தொடர்பில் ஹமாஸ் போராளிகளே பொறுப்பேற்க வேண்டும்.

அமைதிப் பேரணி எனும் அடையாளத்தில் ஹமாஸ் போராளிகள் வன்முறை மிகுந்த போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். ஹமாஸ் போராளிகள் களத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பங்குபற்றி நிலைமைகளை சிக்கல் மிக்கவையாக மாற்றியமைத்து  வருகின்றனர்’ என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் செயித் ராத் அல்ஹுசைன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘இஸ்ரேலிய படைகளின் அத்துமீறிய நடவடிக்கைகளில் பெரும் எண்ணிக்கையிலான பலஸ்தீனர்கள் பலியாகியுள்ளதுடன் பெருமளவானோர் காயமுற்றுள்ளனர். இஸ்ரேலிய படைகள் பலஸ்தீனர்களின் போராட்டங்களில் தாக்குதல்களை நடத்துவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

அவர்களின் உயிர்வாழ்வதற்கான உரிமையை இஸ்ரேலிய படைகள் மதிக்க வேண்டும். மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவோர் குற்றாவாளிகளாக அடையாளப்படுத்தப்படுவர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு சர்வதேச சமூகம் சகல வகையிலும் உதவிகளை வழங்க முன்வர வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

 

அமெரிக்காவின் நகர்வுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பிரித்தானிய பிரதமர்:

ஜெரூசலத்தில் இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதரகம் ஆரம்பிக்கப்பட்டமையை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட பலஸ்தீனர்கள் மீது வன்முறையைக் கொண்டு அடக்குமுறைகள் புரிவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என பிரித்தானிய பிரதமர் தெரேசா மேயின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், ‘ பிரித்தானிய பிரதமர் ஜெரூசலம் குறித்த அமெரிக்காவின் நிலைப்பாட்டை முன்னதாகவே மறுத்துள்ளார். ஜெரூசலத்தை இஸ்ரேலின் தலைநகராக பிரித்தானியா ஒருபோதும் அங்கீகரிக்காது. சமாதான பேச்சுக்கள் மூலம் இருநாட்டுத் தீர்வு எட்டப்பட வேண்டும்.  காசா பகுதியில் பலஸ்தீனர்களின் உயிரிழப்புக்கள் குறித்து பிரித்தானியா கரிசனை கொண்டுள்ளது. அடக்குமுறைகள் இன்றி நிதானமான போக்கு கடைப்பிடிக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றோம்’ என தெரிவித்துள்ளார்.

பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலிய படைகளின் தாக்குதல்களை கண்டித்துள்ள பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோன், பிராந்தியத்தில் சுமுக நிலையை ஏற்படுத்த காத்திரமான முயற்சிகளில் இறங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஜெரூசலத்தில் அமெரிக்கத் தூதரகம் திறக்கப்பட்டமை மற்றும் அதனைத் தொடர்ந்த இஸ்ரேலிய படைகளின் படுகொலைகள் குறித்து நியாயமான விசாரணைகளை மேற்கொள்ள பாதுகாப்புச் சபை ஒன்றுகூட வேண்டும் என கட்டார் முன்னதாக வேண்டுகோள் விடுத்திருந்தது.

இஸ்ரேலின் அண்மைய தாக்குதல்களை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ள தென்னாபிரிக்க அரசு, இஸ்ரேலிய நாட்டுக்கான தனது தூதுவரை அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மீள அழைத்துக் கொண்டுள்ளது.

 

விழுமியங்கள் தொடர்பில் அர்துகான் எமக்குப் பாடம் எடுக்கத் தேவையில்லை – இஸ்ரேலிய பிரதமர்:

காசா எல்லையில் இஸ்ரேலிய படைகள் மேற்கொண்டுள்ள அடாவடித்தனங்கள் தொடர்பில் தமது படைகளைப் பாதுகாக்கும் விதத்தில் அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார்.

அதில் அவர்,

‘ஹமாஸ் தீவிரவாத அமைப்பு இஸ்ரேல் நாட்டை சிதைக்க திட்டம் தீட்டுகிறது. எல்லைகளை உடைத்து எமது நாட்டுக்குள் புகுமாறு தனது ஆதரவாளர்களைத் தூண்டுகிறது. இதற்கு பதில் நடவடிக்கையாகவே எமது படை வீரர்கள் தாக்குதல்களை நிகழ்த்தினர். எமது நாட்டுப் பிரஜைகளையும் நாட்டின் இறைமையையும் பாதுகாக்க வேண்டியது இஸ்ரேலிய படை வீரர்களின் பொறுப்பாகும் அதனை அவர்கள் செவ்வனே நிறைவேற்றி வருகின்றனர்’ என குறிப்பிட்டுள்ளார்.

துருக்கி ஜனாதிபதி அர்துகான் தனது டுவிட்டர் பதிவில் ‘அநாதரவான அப்பாவி மக்களின் நிலங்களைச் சுரண்டி, ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களைப் புறக்கணித்த வகையில் உருவாக்கப்பட்ட ஆக்கிரமிப்பு தேசமொன்றின் பிரதமரே நெதன்யாகு. பலஸ்தீனர்களின் இரத்தக் கறைகள் அவர் கைகளில் இன்னும் மீதமிருக்கின்றன. வெற்று வார்த்தை ஜாலங்கள் மூலம் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு தமது குற்றங்களை மூடி மறைத்திட எண்ணுகிறார். நெதன்யாகு அவர்களே! உங்களது வேதத்தில் குறித்துக் காட்டப்பட்டுள்ள பத்துக் கட்டளைகளைக் கற்று மனிதாபிமானம் குறித்துக் கற்றுக் கொள்ளுங்கள்’ என காரசாரமாக சாடியுள்ளார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில் இஸ்ரேலிய பிரதமர் தனது டுவிட்டர் பதிவில், ‘பயங்கரவாத அமைப்பான ஹமாஸ் இயக்கத்தின் மிக முக்கிய ஆதரவாளர்தான் அர்துகான் எனும் வகையில் பயங்கரவாதம் மற்றும் படுகொலைகள் குறித்து அவர் மிகவும் பரிச்சயம் உள்ளவரே. ஒழுக்க விழுமியங்கள் குறித்து எங்களுக்குப் பாடம் கற்றுத்தர அவருக்குத் தகுதியில்லை’ என குறிப்பிட்டுள்ளார்.

 

 

ட்ரம்ப்பின் தீர்மானம் சர்வதேசத்தின் தீர்மானம் ஆகிவிடாது- ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியா:

கடந்த செவ்வாய்க்கிழமை நக்பா (பாரிய வெளியேற்றம்) தினத்தை நினைவுகூரும் கிழக்கு காசா பகுதியில் ஒன்றுகூடிய பலஸ்தீனர்களின் மத்தியில் உரையாற்றிய ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேலிய எல்லையில் ஆர்ப்பாட்டங்கள் தொடரும் என உறுதிகூறியுள்ளார். அவர் மேலும் உரையாற்றுகையில்,

‘சொந்த மண்ணுக்கு மீளத் திரும்பும் எமது போராட்டம் இஸ்ரேலினால் பலவந்தமாக கைப்பற்றப்பட்ட நிலங்களை மீளக் கைப்பற்றும் வரை தொடர்ந்து முன்னெடுக்கப்படும். எமது போராட்டக்காரர்கள் மீது இஸ்ரேலிய படைகள் ஆயுதங்களைப் பிரயோகித்து அடக்கி விடலாம் என்று எண்ணுகின்றன. மாறாக, உயிர்கள் பலியாகலாம், எமது கொள்கை உறுதி பலியாகிவிட மாட்டாது. வீறுகொண்ட உறுதியுடன் எதிர்த்துப் போராடுவோம். அவர்களது அடக்குமுறைகள் எம்மை கொள்கை ரீதியில் மேலும் பலப்படுத்துகின்றன.

எமது உரிமையான ஜெருசல நகரை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா தன்னிச்சையாக அங்கீகரித்து தனது தூதரகத்தை அங்கே திறப்பதன் மூலம் சர்வதேச ரீதியில் அதற்கு அடையாளம் கிடைத்து விடாது. ட்ரம்ப்பினதோ நெதன்யாகுவினதோ தீர்மானங்கள் ஜெரூசலத்தின் நிலைப்பாட்டை அறிவிப்பதாக அமையாது. ஜெரூசலம் பலஸ்தீன் எனும் சுயாதீன நாட்டின் தலைநகராகவே எப்போதும் திகழும்’  என ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியா தெரிவித்துள்ளார்.

 

ஹஸன் இக்பால்

(மூலம்: அல்ஜஸீரா)

(நன்றி: நவமணி)

 

 

 

ஹஸன் இக்பால்

error: Content is protected !!