Featured Category

நெடுவாசலின் நெடுங்காலச் சதி!

நேற்று நெடுவாசலுக்குச் சென்றபோது ஹைட்ரோ கார்பன் திட்ட எதிர்ப்பியக்க குழுவில் முதன்மை பணியாற்றும் தோழன் தெட்சிணாமூர்த்தியை சந்தித்தது எதிர்பாரா மகிழ்ச்சி. என் வகுப்பு தோழனான அவனை முப்பதாண்டுகள் கழித்துச் சந்தித்து அளவளாவியது ஒன்று மட்டுமே மகிழ்ச்சி. மற்றபடி அன்றைய நெடுவாசல் நினைவுகளை இன்றைய நிகழ்காலத்தோடு ஒப்பிட்டு வருந்தியே பேசிக்கொண்டிருந்தோம். நெடுவாசல் மட்டுமல்லாது முழுக் காவிரிப்படுகை பகுதியும் ஆபத்தில் சிக்கியிருப்பதைப் பகிர்ந்து கொண்டேன்.
மோடி பிரதமராக ஆட்சிக்கு வந்த புதிதில் பெட்ரோலிய விலை குறைந்தது நினைவிருக்கலாம். அதேவேளை தங்கத்தின் விலை உயர்ந்தது. இவ்விரண்டு நிகழ்வுக்கும் பின்னணியில் சர்வதேச அரசியல் காரணம் ஒன்று இருந்தது. பெட்ரோலியத்தை அடிப்படையாகக் கொண்ட ரஷ்யாவின் பொருளாதாரத்தை வீழ்த்த, அய்க்கிய அமெரிக்கா எண்ணை உற்பத்தி நாடுகளைக் கைக்குள் போட்டுக்கொண்டு கச்சா எண்ணை விலையைக் குறைத்தது. எதிர் நடவடிக்கையாக அமெரிக்காவை வீழ்த்த ரஷ்யா டாலர் பொருளாதாரத்தின் அடிப்படையான தங்கத்தை வாங்கிக் குவித்தது. கச்சா எண்ணெய் விலைக் குறைப்பும் தங்கத்தின் விலை உயர்வும் ஒருசேர நிகழ்ந்த இக்காலகட்டத்தில் உலகின் பெரும் எண்ணெய் நிறுவனங்களைச் சொந்தமாகக் கொண்ட அய்க்கிய அமெரிக்கா, தம் கச்சா எண்ணெய் விற்பனையின் வருவாய் இழப்பை தன் வசமிருந்த ‘ஷேல்கேஸ்’ வளத்தைக்கொண்டு ஈடுசெய்ததாகத் தகவல்.

இதில் நமக்கொரு தெளிவான செய்தி கிடைக்கிறது. எதிர்காலத்தில் தங்கம் முடக்கப்பட்டாலோ கச்சா எண்ணெய் இருப்பு தீர்ந்து போனாலோ பன்னாட்டு நிறுவனங்களுக்கு மீதியிருக்கும் ஒரே புதைபடிவ பொருளாதார ஆயுதம் இந்த ஷேல்கேஸ்தான். (காற்று, வெப்ப ஆற்றல் எல்லாம் அவற்றுக்கு உடனடியாக நினைவுக்கு வராது) இத்தகைய அரும்பெரும் புதையல் படுகை மாவட்டங்களில் பேரளவில் புதைந்து கிடக்கையில் முதலாளித்துவ நாடுகளும், பன்னாட்டு நிறுவனங்களும் இவற்றை அவ்வளவு எளிதாகக் கைவிட்டுவிடாது என்பது உறுதி. கார்ப்பரேட் நலனை மட்டுமே சிந்தையில் கொண்டு இயங்கும் நமது அரசுகளும் மக்களின் எதிர்ப்புக்கு அஞ்சி இத்திட்டத்தை முழுமையாகத் திரும்பப் பெற்றுக் கொள்ளாது. ஏனெனில் இது நெடுநாள் கார்ப்பரேட் கனவு. இதை அன்றைய காங்கிரஸ் நடுவணரசும், திமுக மாநில அரசுமே தொடங்கி வைத்தது. இன்றைய பாஜக அரசும் அதிமுக அரசும் தொடர்கிறது.

அன்று பிச்சாவரத்திலிருந்து முத்துப்பேட்டை வரையுள்ள கடற்கரைப் பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட அனல்மின் நிலையங்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டன. இவற்றுக்குத் தேவையான நிலக்கரி வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதற்காகவே MARG எனும் தனியார் துறைமுகம் காரைக்காலிலும் முன்கூட்டியே அமைக்கப்பட்டிருந்தது. இறக்குமதி நிலக்கரியை மட்டுமே நம்பி இந்த மின்னுற்பத்தி நிலையங்கள் இங்கு வரவில்லை. அவற்றுக்கு வேறொரு நோக்கம் இருந்தது.

மீத்தேன் திட்டம் என்பது உண்மையில் அதுமட்டுமேயல்ல. இது நூற்றாண்டை கடந்து செயல்படவிருக்கும் திட்டம். முதல் 35 ஆண்டுகள் வரை மீத்தேன் அடுத்து நிலக்கரி இறுதியில் ஷேல்கேஸ் என்பதே முழுதிட்டம். இந்தத் தொலைநோக்குத் திட்டத்தை மோப்பம் பிடித்தே இங்கு வரிசையாகத் தனியார் அனல்மின் நிலையங்கள் கடையை விரிக்கத் துடிக்கின்றன. இப்போதைக்கு இறக்குமதி நிலக்கரியை பயன்படுத்திக் கொள்வது பிறகு இங்கு நிரந்தரமாகக் கிடைக்கவிருக்கும் நிலக்கரியை பயன்படுத்திக் கொள்வது என்பதே அவற்றின் திட்டம்.
இதுதவிர மற்றொரு பெரியளவிலான புதைபடிவ எரிப்பொருள் திட்ட வலைப்பின்னலும் இருக்கிறது. மணலியிலும் நரிமணத்திலும் இருக்கும் இரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களைத் தவிரக் கடலூரை நடுவமாக வைத்து மற்றொன்றையும் தொடங்கும் திட்டமும் கைவசமுண்டு. நாகார்ஜுனா குழுமமும் டாடா நிறுவனமும் இணைந்து இதனை அமைக்கவிருக்கின்றன. அப்படி அமைந்தால் இதன் வலைப்பின்னல் எப்படி அமையும் என்பதை இங்கு இணைக்கப்பட்டிருக்கும் படம் தெரிவிக்கிறது. இம்மாபெரும் திட்டம் கைவசமிருக்கும்போது ஹைட்ரோகார்பன் திட்டம் அவ்வளவு எளிதாகக் கைவிடப்படாது என்பதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும்.

மீத்தேன் நிலக்கரி திட்டத்துக்கு எழுந்த கடுமையான எதிர்ப்பின் காரணமாக அது ஷேல்கேஸ் என மாறி, அதுவும் எதிர்க்கப்பட இப்போது ஹைட்ரோ கார்பன். இந்த நீர்கரிம எரிப்பொருள் திட்டம் ஆபத்தானது இல்லை, இதில் நீரியல் விரிசல்முறை போன்ற நடவடிக்கைகளுக்கு இடமில்லை என்ற புள்ளியிலிருந்து அரசு சமாதான பேச்சுக்களைத் தொடங்க கூடும். கார்ப்பரேட்களுக்கு இசைவாகச் சுற்றுச்சூழல் சட்டங்களை அப்பட்டமாக மாற்றியமைத்துக் கொண்டுள்ள அரசிடமிருந்து நேர்மையான சொற்கள் வருவதற்கு அறவே வாய்ப்பில்லை. இந்த ஹைட்ரோகார்பன் திட்டம் எதிர்காலத்தில் ஷேல்கேஸ், மீத்தேன் திட்டமாக மாறும் என்பதை எளிய மக்களும் புரிந்துக்கொண்டிருப்பதால் இச்சொற்களை நம்ப இனியும் யாரும் அணியமாக இல்லை..

இந்தியாவுக்காகத் தமிழ்நாடு தியாகம் செய்ய வேண்டும் என இல.கணேசன் கூறியிருப்பதாக வந்துள்ள செய்தி இதை உறுதிப்படுத்துகிறது. காவிரிப்படுகை மட்டுமன்றி தமிழ்நாடே இவ்வாபத்தை எதிர்நோக்கி இருப்பதை இவரது கூற்று உறுதிப்படுத்துகிறது. வாழ்வியலை அழிக்கும் எந்தவொரு திட்டத்தையும் அதன் தொடக்கப்புள்ளியிலிருந்தே நாம் எதிர்த்து போராட வேண்டிய காலக்கட்டத்துக்கு வந்துள்ளோம்.

கார்ப்பரேட்டும் அதிகாரமும் இணைந்து நாம் தேர்ந்தெடுக்க நமக்கு இரு வாய்ப்புகளை மட்டுமே வழங்குகிறது. ஒன்று கார்ப்பரேட் மட்டுமே வாழவேண்டும். மற்றொன்று நாம் வாழ வேண்டும். இரண்டாவது வாய்ப்பை தேர்ந்தெடுத்து தமிழ்மக்களாகிய நாம் புதிய புறநானூற்றை எழுதுவோம்.

 

– நக்கீரன்

எடிட்டோரியல்

error: Content is protected !!