Featured Category

கல்லறையில் வசிக்கும் எகிப்து மக்கள் – ஒரு ரிப்போர்ட்

எகிப்து தலைநகர் கெய்ரோவில் வறுமையின் கோரப்பிடிக்குள் சிக்குண்ட பல குடும்பங்கள் நகரங்களில் வாழ வழியில்லாது, பிணங்கள் புதைக்கப்படும் கல்லறைகளில் ஒதுக்குப்புறமாக தமக்கென சிறு குடில்களை அமைத்து, நடமாடும் உயிருள்ள பிணங்களாய் வாழ்நாட்களை கடத்தி வரும் சொல்லொணா சோகங்களில் ஒரு பகுதியையேனும் உலகிற்குச் சொல்லிட அங்கு வாழ்ந்து வரும் குடும்பமொன்றின் குடிலுக்குள் நுழைந்திடுவோம்.குடும்ப உறுப்பினர்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் இந்தித் திரைப்படத்தை கண்கொட்டாது பார்த்து ரசித்துக் கொண்டிருக்கின்றனர். அவ்வப்போது எழும் சிரிப்பொலிகள் திரைப்படத்தில் நகைச்சுவைக்காட்சிகள் வந்து போயின என்பதைக் எடுத்துகாட்டுகின்றன. வீரிட்டழும் பெண்களும், அவர்களை விழுந்து விடாது தாங்கும் ஆண்களுமாக குழந்தையொன்றின் இறந்த உடலைப் புதைப்பதற்கென சவப்பெட்டியில் சுமந்தவாறு ஒரு கூட்டம் அங்கே நுழைகிறது. அருகே சுவரொன்றில் பொருத்தப்பட்டுள்ள தொலைக்காட்சியில் உதைப்பாந்தாட்ட போட்டியைக் கண்டு களித்தவாறும், இலக்குத் தவறாது கோல் அடிக்கும் ஒவ்வொரு தருணமும் பக்கம் நடப்பதறியாது கைதட்டிக் கொண்டாடும் இன்னொரு கூட்டமும் தம் பங்குக்கு இரைச்சல் எழுப்பிக் கொண்டிருக்கின்றது. சுமந்து வரப்பட்ட குழந்தையின் இடுகாடும் தயாராகிக் கொண்டிருக்கிறது.
கெய்ரோவில் ‘பிணங்களின் நகரம்’ என அறியப்படும் இப்பகுதியில் நாளாந்தம் காணக்கிடைக்கும் வழமையான காட்சிகளின் நேரடி வர்ணனையையே இதுவாகும். இங்கே இடுகாட்டில் நிரந்தரமாக வசிக்கும் குடும்பங்கள் தமது நாளாந்த வாழ்க்கைச் செயற்பாடுகளை இயன்றவரை இயல்பாக வைத்திருக்க முயற்சிக்கின்றனர்.
இறந்தும் புதைக்கப்படாது நடமாடுகிறோம்: சப்ரீன் (3 பிள்ளைகளின் தாய்)
இடுகாட்டில் வாழ்ந்து வரும் மூன்று பிள்ளைகளின் தாயான சப்ரீன் இடுகாட்டு வாழ்க்கையில் தாம் படும்பாடு பற்றி குறிப்பிடுகையில், “ஆரம்பத்தில் பிணங்களுக்கு அருகில் வாழ்ந்து வருவதென்பது நினைத்துப் பார்க்க இயலாத விடயமாக இருந்தது… எனினும், நாட்கள் செல்லச்செல்ல அதற்குத்தக்கன நாம் எம்மைப் பயிற்றுவித்துக் கொண்டுள்ளோம்…. சிலநேரங்களில் இறந்தும் புதைக்கப்படாது நடமாடும் பிணங்களாகவே நாம் எம்மைக் கருதிக்கொள்ள வேண்டியுள்ளது…” என்கிறார்.
தனது பெற்றோர் வாழ்ந்ததும், தான் பிறந்து வளர்ந்ததும் இக்கல்லறையில்தான் என கூறும் சப்ரீனின் கணவரான 67 வயது நிரம்பிய செயித் அல்அராபி, தனது பிள்ளைகளுக்கும் கல்லறை வாழ்க்கைதான் நிரந்தரமாகி விடுமோ? என அஞ்சுகிறார்.
அல்அராபியின் மகனான அஹ்மத் எவ்வித உணர்ச்சியையும் முகத்தில் வெளிக்காட்டாது வெறுப்புடன் பேச்சைத் தொடங்குகிறார். “நாம் இங்கே தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வருகிறோம். எமது அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து தர எவரும் முன்வருவதாயில்லை…ஆட்கள் வருவார்கள்… போட்டோ எடுப்பார்கள்.. போய் விடுவார்கள்… அவ்வளவுதான்…”
1950 களில் அல்அராபியின் தந்தை அப்துல் ஹமீத் தனது குடும்பத்துடன் எகிப்தின் வறிய பிரதேசமான கிஸா பகுதியில் இருந்து வேலை தேடி கெய்ரோவுக்கு வந்துள்ளார். வேலையும் கிடைக்கவில்லை; தங்குவற்கு வீடொன்றை வாடகைக்குப் பெறவும் கையில் பணமில்லை. ஆயிரம் ஆண்டு கால வரலாற்றை கொண்ட அல்அஸார் பள்ளிவாசலை ஒட்டியதான மையவாடியில் வேறுவழியின்றி குடும்பத்துடன் தஞ்சம் புகுந்துள்ளார்.
எகிப்தின் பிரபல பாடகரும் நடிகருமான பாரித் அல்அத்ராஸ் புதைக்கப்பட்ட மையவாடியாக இது அறியப்படுகிறது. இங்கே மையவாடியை தமது இருப்பிடங்களாக மாற்றிக்கொண்டவர்களே இங்கே புதைகுழி தோண்டுபவர்களாக, பராமரிப்பாளர்களாக பணியாற்றுகின்றனர். மேலும் சிலர் சிறு வணிகர்களாகவும், கூலித்தொழிலாளர்களாகவும் பிழைப்பு நடத்துகின்றனர்.
எகிப்தில் பணம் படைத்தோர் இக்கல்லறை பகுதியில் 200 சதுர மீற்றர் பரப்புடைய நிலத்துண்டை பணம் செலுத்தி சொந்தமாக வாங்கிக் கொள்கின்றனர். வார இறுதி நாட்களில் அல்லது விசேட தினங்களில் புதைக்கப்பட்ட தமது உறவினர்களை தரிசிக்கவும், சமாதிக்கருகிலேயே சில மணிநேரங்களை அமைதியாகக் கழிக்கவுமென சிறு அறையொன்றையும் அமைத்துக் கொள்கின்றனர்.
இவ்வாறு அமைக்கப்பட்ட அறையொன்றிலேயே அல்அராபி குடும்பம் வாழ்ந்து வருகிறது. இச்சிறு அறையில் ஆங்காங்கே காணப்படும் பழையதும் மக்களால் கைவிடப்பட்டதுமான பாவனைப் பொருட்கள் உயிர்வாழ்க்கையொன்று இடம்பெறுவதற்கு சான்று பகர்வதாய் அமைகின்றன. பழைய மர கட்டில், உடைந்த கதிரைகள் இரண்டு, பழைய சலவை இயந்திரம் மற்றும் தொலைக்காட்சி பெட்டியொன்று அச்சிறு அறையை முற்றிலும் ஆக்கிரமிக்கிறது.
அறையின் மூலையில் வைக்கப்பட்டுள்ள சிறு அடுப்பு மாத்திரமே ஒட்டுமொத்த சமையலறையின் வகிபாகத்தை ஆற்றுகின்றது போல் தோற்றுகின்றது. அரிசி, உருளைக்கிழங்கு மற்றும் பருப்பு வகைத் தானியம் இவையே இக்கல்லறை வாழ் மனிதர்களது அன்றாட உணவு.
“இறைச்சி, கோழி வாங்குவதற்கு போதிய வருவாய் கிடைப்பதில்லை… அன்றாடத் தேவைக்கான உணவை அன்றே தயார் செய்வோம்… இதனால் உணவுகள் எஞ்சுவதில்லை… குளிரூட்டியும் எமக்குத் தேவைப்படுவதில்லை” என்கின்றனர்.
அல்அராபியும் சப்ரீனும் இக்கல்லறைப் பிரதேசத்திலேயே பிறந்து வளர்ந்து, திருமணமும் செய்து குடும்பமாக வாழ்ந்து வருகின்றவர்கள்.
இறுதியாக 2008 இல் மேற்கொள்ளப்பட்டிருந்த எகிப்தின் தேசிய புள்ளிவிபரங்களின் பிரகாரம் கெய்ரோவில் அமைந்துள்ள கல்லறைகளில் மாத்திரம் சுமார் 1.5 மில்லியன் மக்கள் வாழ்ந்து வருவதாக கணிப்பிடப்பட்டுள்ளது. எகிப்தின் மொத்த சனத்தொகை 90 மில்லியனுக்கும் அதிகமாகும். இதில் எகிப்து தலைநகர் கெய்ரோவில் மாத்திரம் 20 மில்லியனுக்கும் அதிகமானோர் வாழ்கின்றனர்.
டீசல் எரிபொருளினால் இயக்கப்படும் ஜெனரேற்றர் மூலம் அல்அராபி குடும்பம் மின்சாரத்தைப் பெற்றுக்கொள்கிறது. இதற்கென மாதாந்தம் ஒரு டொலரை தனது பங்காக அயலவருக்கு அல்அராபி வழங்கி வருகிறார். சமாதிக்கு புறம்பாக மரப்பலகைகளால் அடைக்கப்பட்ட, சிறு குழியொன்றை மலசலகூடமாக பயன்படுத்தி வருகின்றனர். நீர் தகரத்தினாலான பாரிய பீப்பாய் கழுவுதல், குளித்தல் கடமைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டுக்கான புள்ளிவிபரங்களின் பிரகாரம் கெய்ரோவில் 40,000 குடும்பங்கள் முறையான மலசலகூட வசதிகள் இன்றி வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
“2017 இல் கூட எமது நிலைமை இவ்வாறுதான் இருக்கிறது… சுத்தமான குடிநீர், ஒழுங்கான மின்சார வசதி, அடிப்படை வசதிகள் இன்றி வாழ்ந்து வருகிறோம்…” என வருத்ததுடன் கூறுகிறார் அல்அராபி.
பழைய, கிழிந்த சப்பாத்துக்களை தைத்துக் கொடுத்து அன்றாட உணவுக்கான வருமானத்தை தான் தேடிக் கொள்வதாக தெரிவிக்கின்றார்.
அன்றாட வாழ்க்கைச் சுமைகளுக்கு மேலதிகமாக தனது மனைவி சப்ரீனின் இதய நோய்க்கும் வைத்தியம் பார்க்க வேண்டியுள்ளது. மாதாந்தம் 14 டொலர்கள் மருந்துக்கென செலவாகிறது. எனினும், அதிர்ஷ்டவசமாக சப்ரீனின் மருத்துவச் செலவை உள்ளூர் நலன்புரி மன்றம் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளது. மேலும் சப்ரீனின் இதய அறுவை சிகிச்சைக்கான செலவையும் அம்மன்றமே பொறுப்பேற்றுக் கொண்டுள்ளதாகவும் கூறுகிறார்.

‘இமை திறந்தே உறங்குகிறேன்’ – யூனுஸ் இப்ராஹீம் (வயது 63, 8 பிள்ளைகளின் தந்தை)
அல்அராபியின் அயல் கல்லறைவாசி 63 வயது நிரம்பிய யூனுஸ் இப்ராஹீம். 8 பிள்ளைகளின் தந்தையான இவர் தெருவோரத்தில் சட்டைகள், சப்பாத்துக்கள் விற்கும் சிறுவியாபாரி ஆவார். தனது அறையின் கதவில் காணப்படும் பாரிய ஓட்டைகளை பிளாஸ்திக் பையைக் கொண்டு அடைத்துக் கொண்டிருக்கிறார். இரவில் தாங்க முடியா குளிர்பனி வீசுவதாகவும் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையே இதுவென கூறுகிறார்.
“எனது குடும்பத்தினர் இரவில் நிம்மதியாக உறங்குவதற்கு ஒரு பாதுகாப்பான இடம்… இது மட்டுமே நான் இவ்வுலகில் வேண்டுவது… இரவில் திருடர்களின் அச்சத்தினால் எனது குடும்பத்தினரை உறங்க வைத்துவிட்டு நான் இமை திறந்தவாறே உறங்க முயற்சித்து வருகிறேன்…” யூனுஸ் தன் கஷ்டங்களை எம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.
செயிதா ஸைனப் எனும் அண்மித்த பகுதியில் வாடகை வீடொன்றில் வசித்து வந்த யூனுஸ் குடும்பம் இறுதி 16 மாதங்களுக்கான வாடகை 14 டொலர்களை செலுத்த வழியில்லாது போனதால், வீட்டு உரிமையாளரினால் 2000 ஆம் ஆண்டு துரத்தப்படுகிறார். இறுதியில் கல்லறையே தஞ்சம் என 7 சதுர மீற்றருக்கும் குறைவான நிலப்பரப்பில் 8 பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறார்.
“எனக்கு 8 பிள்ளைகள் இருக்கின்றனர்… 28 டொலர்களே எனது மாத வருமானம்… வாழ்க்கைச் செலவுகள் போக எதுவும் எஞ்சுவதில்லை… இதனால் அங்கே என்னால் மாத வாடகை செலுத்த முடியாமல் போனது… நாம் இப்போது இருக்கும் இந்த சமாதியின் பராமரிப்பாளருக்கு மாதம் 5 டொலர்கள் செலுத்தினால் போதும்… எனவே இங்கேயே நெடுங்காலமாக வாழ்ந்து வருகிறோம்” என யூனுஸ் தான் கல்லறைப் பகுதியில் குடியேறிய கதையை விவரிக்கிறார்.
2000 இல் யூனுஸ் குடும்பம் கல்லறை வீட்டில் குடியேறியபோது கல்லறை பராமரிப்பாளருக்கு மாதம் 2.5 டொலர்கள் செலுத்தி வந்துள்ளார். சமாதிகளின் பராமரிப்பாளர்கள் இவ்வாறு குடியமரும் கல்லறைவாசிகளிடம் சட்டவிரோதமான முறையில் பணம் வசூலித்து வருகின்றனர்.
எகிப்திய மொத்த சனத்தொகையில் 27.8 சதவீதமானோர் 340 டொலர்களுக்கும் குறைவான வருடாந்த தலா வருமானம் கொண்ட, வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்கள் என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
2016 நவம்பரில் சர்வதேச நாணயமாற்று சந்தையில் எகிப்திய பவுணுக்கு மதிப்பிறக்கம் ஏற்பட்டதையடுத்து பொருட்களின் விலைவாசி பெரிதும் அதிகரித்துள்ளது.
கெய்ரோ நகர ஆளுநரின் ஊடக பேச்சாளர் காலித் முஸ்தபா கல்லறைவாசிகள் தொடர்பில் குறிப்பிடுகையில், “சேரிப் புற வாழ் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த அரசாங்கம் சிறந்த செயற்திட்டங்களை கொண்டுவந்துள்ளது. சேரிப்புற வீடுகளுக்கு பதிலாக சிறந்த குடிமனைகளை வழங்கும் ‘தெற்கு கெய்ரோ-அல்அஷ்மராத்’ மற்றும் ‘மேற்கு அலெக்சாந்திரியா-காய்டில் அனாப்’ போன்ற பல செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன” என தெரிவித்துள்ளார்.
அல்ஷாபீ பகுதியில் கல்லறைகளில் வாழும் மக்களுக்கு உணவுப்பொருட்கள், மருத்துவ வசதிகள் மற்றும் அடிப்படை சேவைகள் என்பவற்றை வழங்கி வரும் தன்னார்வ நிறுவனமொன்றின் அதிகாரி மொஹம்மத் மெஹ்தாத் குறிப்பிடுகையில்,
“கல்லறைகளில் பல தலைமுறைகளாக வாழும் ‘இந்த இனக்குழு’ தொடர்பில் எகிப்திய அரசாங்கம் கரிசனை காட்டுவதாக இல்லை… அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு எவ்வித காத்திரமான நடவடிக்கைகளையும் அரசு செயற்படுத்தவில்லை…. இப்படியான ஒரு பிரிவினர் வாழ்ந்து வருவது பற்றி அரசு மறந்தே போயுள்ளது. எகிப்தில் ஆட்சியேறிய பல அரசாங்கங்கள் இவர்களின் வாழ்க்கையை முன்னேற்றுவதாக வாக்களித்தன… எனினும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை…. மாறாக, உள்நாட்டு ஊடகங்கள் ‘கல்லறைவாசி மக்களை போதைப்பொருள் விற்பனையாளர்களாகவும் குற்றச்செயல்களில் ஈடுபட்டு பதுங்கி வாழ்பவர்களாகவும் சித்திரித்து வருகின்றது… இவர்களும் எகிப்திய பிரஜைகள் தான்…. ஏனைய பிரஜைகள் அனுபவிக்கும் அத்தனை உரிமைகளையும் இவர்களும் அனுபவிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை” என கூறுகின்றார்.
இறுதியில் கல்லறைவாசியான அல்அராபி உதட்டில் ஒட்டிய மெல்லிய புன்னகையுடன் கூறியவை, “நான் இறந்த பிறகு என்னுடலை கல்லறை நோக்கி தூக்கி சுமந்து செல்லத் தேவையில்லை…. நான் பிறந்து வளர்ந்து திருமணம் புரிந்து, வாழ்ந்த இதே கல்லறையில் ஒருநாள் மரணித்து புதைந்தழியவும் போகிறேன்…”

-ஹஸன் இக்பால்

ஹஸன் இக்பால்

error: Content is protected !!